Published : 23 Aug 2025 08:54 AM
Last Updated : 23 Aug 2025 08:54 AM
புதுடெல்லி: பெங்களூருவில் நடைபெற இருந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. 12 வருடங்களுக்குப் பிறகு மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக முதலில் வெளியிடப்பட்ட போட்டி அட்டவணையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆட்டங்கள் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
தேவையான நிர்வாக மற்றும் பாதுகாப்பு அனுமதிகளை பெறத் தவறியதால், சின்னசாமி மைதானம் போட்டிகளை நடத்த தகுதியற்றதாக கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் கடந்த ஜூன் 4-ம் தேதி இங்கு நடைபெற்ற ஆர்சிபி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுதான். இதனால் இங்கு நடைபெற இருந்த உலகக் கோப்பை தொடரின் 5 ஆட்டங்கள் நவி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த 5 ஆட்டங்களில் தொடக்க போட்டி, அரை இறுதி ஆட்டம், இறுதிப் போட்டி ஆகியவை அடங்கும்.
நவி மும்பையுடன் குவாஹாட்டி, இந்தூர், விசாகப்பட்டினம் மற்றும் இலங்கையில் உள்ள கொழும்பு நகரிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் போட்டி கொழும்பு நகரில் நடைபெறுகிறது.
ஏனெனில் இரு நாடுகள் இடையே இருதரப்பு போட்டிகள் நடைபெறுவதில்லை. மேலும் பல்வேறு அணிகள் கலந்து கொள்ளும் தொடரில் மோதும் ஆட்டங்களை பொதுவான இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT