Published : 22 Aug 2025 05:22 PM
Last Updated : 22 Aug 2025 05:22 PM

“உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்டபோதே ஓய்வு எண்ணம் வந்தது” - அஸ்வினிடம் திராவிட் மனம் திறப்பு

மெல்போர்ன் மைதானத்தில் ஒரு கேட்சை விட்டபோதுதான் முதன்முதலாக ‘போதும் ஓய்வு பெற்றுவிடுவோம்’ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தன என்று இந்திய அணியின் முன்னாள் பெருஞ்சுவர் ராகுல் திராவிட் மனம் திறந்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வினுடனான ‘குட்டி ஸ்டோரீஸ்’ யூடியூப் ஷோவில் ஓர் உரையாடலில் இது தொடர்பாக ராகுல் திராவிட் கூறியது: “உங்கள் பந்தில்தான் கேட்சை விட்டேன் அஸ்வின். மேல்போர்னில் அதுவும் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கேட்சை விட்டேன். அது நான் வாழ்க்கையில் ஒருபோதும் விடக்கூடிய கேட்ச் அல்ல. மிகவும் சுலபமான ஒரு கேட்ச்.

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பல விஷயங்களை மறந்து விடுவேன். ஆனால் கேட்ச்களை விட்டது மட்டும் தொடர்ந்து நினைவில் உள்ளது. அந்தக் கணம்தான் சரியானது என்று தெரிந்தது. அந்தத் தருணம்தான் போதும் வேறு வேலைகளைப் பார்ப்போம் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அந்தத் தொடர் முடிந்தவுடனேயே எனக்குத் தெரியும்.

ஆனாலும், நான் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க விரும்பவில்லை. இதுதான் என்னுடைய நிலை, இதுதான் என்னுடைய உணர்வு எனும் பட்சத்தில் அந்தக் கணத்தில் நான் யோசித்தது என்னவெனில், டெஸ்ட் கிரிக்கெட் இனி நமக்கு அவ்வளவுதான். சரி நாம் வீட்டுக்குத் திரும்பி இதைப் பற்றி ஆற அமர யோசிப்போம் என்று முடிவெடுத்தேன். அப்போது இது உணர்ச்சிகரமான முடிவல்ல, அது முடிவுதான் என்று தெளிவடைந்தேன்.

எனவே, வீட்டுக்குப் போய் 2-3 வாரங்கள் குடும்பத்துடன் செலவிட்டேன். அப்போது முடிவெடுத்தேன்... இனி கிரிக்கெட் போதும், இனி போய் விளையாடப் போவதில்லை என்று திட்டவட்டமாக முடிவெடுத்தேன்.

நிறைய இளம் வீரர்கள் வந்தவண்ணம் இருந்தனர். விராட் கோலி, ரோஹித் சர்மா நன்றாக வந்து கொண்டிருந்தனர். விராட்டுக்கு ஓர் அருமையான தொடராக அந்தத் தொடரே அமைந்தது. புஜாராவும் ரன்கள் எடுத்துக் கொண்டிருந்தார். ரஹானே அருமையாக ஆடிக்கொண்டிருந்தார். ஒரு 4-5 வீரர்கள் சரியாக வந்து கொண்டிருந்தனர். இவர்கள்தான் அடுத்தத் தலைமுறை இந்திய வீரர்கள் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது.

என் காலம் முடிந்து விட்டது, முடிந்த வரை பங்களிப்பு செய்தோம். அணியை என்னால் இயன்ற அளவுக்கு முன்னுக்குக் கொண்டு வந்தேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இரண்டு தொடர்களிலும் 0-4 என்று தோல்வி கண்டது நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தியது. ஒரு சீனியர் வீரராக அணிக்காக பங்களிப்புச் செய்ய முடியவில்லையா, நகர்ந்து விட வேண்டியதுதான்” என்று ராகுல் திராவிட் கூறினார்.

திராவிட் தன் கேப்டன்சியில் கிரெக் சாப்பல் பயிற்சிகாலத்தில் தொடர்ச்சியாக17 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சேசிங்கில் வென்ற ஒரே அணி என்று இந்திய அணியின் உலக சாதனையை நிகழ்த்திக் காட்டியவர்.

2007 உலகக்கோப்பை சமயத்தில் கிரெக் சாப்பலும் இவரும் சேர்ந்து செய்யத் துணிந்த மாற்றங்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்குப் பிடித்தமானதாக இல்லை. அதன் விளைவு 2007 உலகக்கோப்பையில் திராவிட் பழி வாங்கப்பட்டு இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x