Published : 22 Aug 2025 07:41 AM
Last Updated : 22 Aug 2025 07:41 AM
சென்னை: 64-வது மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விஷால் தென்னரசு கயல்விழி பந்தய தூரத்தை 45.12 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதற்கு முன்னர் முகமது அனாஸ் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பந்தய தூரத்தை 45.21 விநாடிகளில் எட்டியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் 21 வயதான விஷால் தென்னரசு கயல்விழி.
மேலும் இதன் மூலம் இந்த சீசனில் 400 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய அளவில் விரைவாக பந்தய இலக்கை எட்டிய 4-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த வகையில் ஜப்பானின் யூகி ஜோசப் நகாஜிமா (44.84 விநாடிகள்), கத்தாரின் அமர் இஸ்மாயில் இப்ராஹிம் (44.90 விநாடிகள்), சீனாவின் லியுகாய் லியு (45.06 விநாடிகள்) ஆகியோர் இந்த சீசனில் விரைவாக இலக்கை அடைந்துள்ளனர்.
விஷால் இலக்கை 45.21 விநாடிகளில் எட்டி பிடித்த போதிலும் உலக சாம்பியன்ஷிப் தகுதி நேரமான 44.85 விநாடிகளை விட மிகவும் பின்தங்கியிருந்தார். மற்றொரு தமிழக வீரரான ராஜேஷ் ரமேஷ் இலக்கை 46.04 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், ஹரியாணாவின் விக்ராந்த் பன்சால் (46.17 விநாடிகள்) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT