Published : 21 Aug 2025 06:52 AM
Last Updated : 21 Aug 2025 06:52 AM
சென்னை: ஆல் இந்தியா புச்சி பாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - இமாச்சல பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘ஏ’ மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 274 ரன்களும், இமாச்சல பிரதேசம் 214 ரன்களும் எடுத்தன.
60 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 45 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. விமல் குமார் 105. ராதாகிருஷ்ணன் 59 ரன்கள் சேர்த்தனர். 307 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இமாச்சல் பிரதேசம் 26.1 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் சார்பில் வித்யுத் 4, அச்யுத் 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக அச்யுத் தேர்வானார். 196 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி முழுமையாக 6 புள்ளிகளை பெற்றது.
குருநானக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சத்தீஷ்கர் - மகாராஷ்டிரா அணிகள் மோதின. இதன் முதல் இன்னிங்ஸில் சத்தீஷ்கர் 252 ரன்களும், மகாராஷ்டிரா 217 ரன்களும் எடுத்தன. 35 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய சத்தீஷ்கர் 43.3 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
184 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மகாராஷ்டிரா அணி 43.5 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சத்தீஷ்கர் அணிக்கு 6 புள்ளிகள் வழங்கப்பட்டன. பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஜம்மு & காஷ்மீர் அணி.
பிசிடி-ஐபி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பரோடா அணி. கோஜன் ‘பி’ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டிஎன்சிஏ லெவன் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை தோற்கடித்தது. 266 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டிஎன்சி லெவன் அணி 44.1 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சச்சின் 115, ஆதிஷ் 57 ரன்கள் விளாசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT