Published : 20 Aug 2025 06:43 AM
Last Updated : 20 Aug 2025 06:43 AM
மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் உள்ளன. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 15 பேரை உள்ளடக்கிய இந்திய அணி தேர்வு மும்பையில் நேற்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் நடைபெற்றது. கேப்டன் சூர்யகுமார் யாதவும் இதில் பங்கேற்றார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான ஷுப்மன் கில், ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் டி 20 அணிக்குள்கொண்டு வரப்பட்டுள்ளார். துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர்,கடைசியாக கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் இலங்கைக்கு எதிரான டி 20 போட்டியில் விளையாடி இருந்தார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பணிச்சுமை காரணமாக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்ற வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தற்போதுதான் சர்வதேச டி 20 போட்டிகளுக்கு திரும்புகிறார் பும்ரா. அவருடன் வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக் ஷர்
படேல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிரதான சுழற்பந்து வீசசாளர்களாக வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா தேர்வாகி உள்ளனர். டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா இடம் பிடித்துள்ளனர். பினிஷரான ரிங்கு சிங்கும் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அதே வேளையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா,ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், வருண் சக்ரவர்த்தி,குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT