Published : 16 Aug 2025 03:57 PM
Last Updated : 16 Aug 2025 03:57 PM

136 ஆண்டு சாதனை முறியடிப்பு: இங்கிலாந்தின் இளம் கேப்டன் ஆன ஜேக்கப் பெத்தேல்!

அடுத்த மாதம் டப்ளினில் அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜேக்கப் பெத்தேல் அறிவிக்கப்பட்டுள்ளார். 21 வயது ஆல்ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணியின் இளைய கேப்டன் ஆனார். இதன் மூலம் 136 ஆண்டுகால வயது சாதனையை முறியடித்துள்ளார்.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி கடும் சவாலான கடும் உடலுழைப்பைக் கோரிய டெஸ்ட் தொடரில் ஆடிய பிறகே ரெகுலர் டி20 கேப்டன் ஹாரி புரூக் இந்தத்ட் தொடரில் ஆடவில்லை என்பதால் பெத்தேல் கேப்டனாக உயர்த்தப்பட்டுள்ளார். ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடப்படவிருக்கும் ஒருநாள், டி20 தொடருக்கு ஹாரி புரூக் கேப்டனாகத் திரும்புவார்.

அயர்லாந்தில் டி20 தொடர் செப்டம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டப்ளினில் உள்ள மலாஹைடில் நடைபெறும். இங்கிலாந்தில் தென்னாப்பிரிக்காவின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 2 முதல் 7 வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 10 முதல் 14 வரை மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் நடைபெறும்.

ஜேக்கப் பெத்தேல் பாஸ்பால் காலக்கட்டத்தில் கடந்த ஆண்டுதான் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்துக்காக அறிமுகமானார். இவருக்கு முன்பாக இளம் கேப்டனாக உயர்த்தப்பட்டவர் 1889-ம் ஆண்டு மாண்ட்டி பௌடன் என்பவருக்கு அப்போது வயது 23. இதனையடுத்து இப்போது ஜேக்கப் பெத்தேல் 21 வயதில் கேப்டனாகியுள்ளார்.

இப்போது ஜேக்கப் பெத்தேல் ஜாம்பவான் ஜாஸ் பட்லர் உள்ளிட்டோரை வழிநடத்தவுள்ளார். ஜேக்கப் கிரகாம் பெத்தேல் என்ற இயற்பெயர் கொண்ட பெத்தேல் அக்டோபர் 23, 2003-ம் ஆண்டு மே.இ.தீவுகளில் உள்ள பார்படோஸில் பிறந்தார். இடது கை பேட்டிங்கும், இடது கை ஸ்பின் பவுலிங்கும் வீசுபவர்.

20 வயதில் இங்கிலாந்துக்காக தன் 2-வது போட்டியிலேயே ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பாவை ஒரே ஓவரில் 20 ரன்களை விளாசி சர்வதேச கிரிக்கெட்டில் தன் வரவை அறிவித்தார். 47 பந்துகளில் 90 ரன்களை விளாசி அந்தப் போட்டியை இவரும் லியாம் லிவிங்ஸ்டனும் வெற்றி பெற்றுக் கொடுத்தனர்.

அதன் பிறகு கரீபியன் தொடரில் 3 அரைசதங்கள் என்று சீரான முறையில் தன் திறமையை வெளிப்படுத்தத் தொடங்கினார். பெத்தேல் உண்மையில் தான் பிறந்த மேஇ.தீவுகளுக்குத்தான் ஆட வேண்டியவர். ஆனால் 13 வயதில் ரக்பி பள்ளியில் ஸ்காலர்ஷிப் கிடைக்க, இங்கிலாந்துக்கு அவர் குடிபெயர்ந்தார். அதிலிருந்து அவர் திரும்பிப் பார்க்கவில்லை. இன்று இங்கிலாந்து அணியின் 3 வடிவ ஆல்ரவுண்டராக எழுச்சி பெற்று இப்போது கேப்டனாகவும் உயர்வு பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x