Published : 10 Aug 2025 10:51 AM
Last Updated : 10 Aug 2025 10:51 AM
சென்னை: திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடரின் 3-வது சீசன் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (11-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதில் ‘ஏ’ பிரிவில் வருமான வரித்துறை, மாஸ்கோ மேஜிக், தியானத் வீரன்ஸ், ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்சைஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இந்தியன் வங்கி, ஏ.ஜி. அலுவலக அணி, எஸ்.எம். நகர் ஹாக்கி, பட்டாபிராம் ஸ்ட்ரைக்கர்ஸ், தெற்கு ரயில்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும்.
இந்த சுற்றின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் ஆட்டத்தில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப் போட்டியில் கால்பதிக்கும். இறுதிப் போட்டி 31-ம் தேதி நடைபெறுகிறது. முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகை கிடைக்கும்.
இந்த தகவலை நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது லீக் இயக்குனரான இந்திய ஹாக்கியின் லெஜண்ட் வி.பாஸ்கரன், திருவள்ளூர் ஹாக்கி சங்க தலைவர் பிரகாஷ் அய்யாதுரை ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
ஒலிம்பியன்கள் முகமது ரியாஸ், திருமால்வளவன், போட்டியின் தொழில்நுட்ப இயக்குநர் மொகுல் முகம்மது மூனீர், இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் சி.ஆர்.குமார், இந்திய அணி வீரர்கள் மாரீஸ்வரன், சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT