Published : 08 Aug 2025 11:51 PM
Last Updated : 08 Aug 2025 11:51 PM
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட், இசையமைப்பாளர் அஸ்வின் ஆகியோர் ‘பேடல்’ விளையாடி மகிழ்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோவின் பின்னணியில் ‘கூலி’ படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது.
‘7பேடல்’ என்ற பெயரில் புதிய பேடல் பிராண்ட் ஒன்றை தோனி தொடங்கி உள்ளார். இதன் முதல் மையத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தோனி உடன் ருதுராஜ் மற்றும் அனிருத் ஆகியோரும் பங்கேற்றனர்.
சென்னை - பாலவாக்கம் ஈசிஆர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சாலை - ஆல்பாபெட் பள்ளி அருகில் இந்த மையம் அமைந்துள்ளது. சுமார் 20,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மையத்தில் மூன்று பேடல் கோர்ட், ஒரு பிக்கல் பால் கோர்ட், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், காஃபே உள்ளிட்டவை அமைந்துள்ளன.
“சென்னை எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். எனக்கு இந்த நகரம் களத்திலும், களத்துக்கு வெளியிலும் கொடுத்துள்ளது அதிகம். அதனால் எனது முதல் பேடல் மையத்தை சென்னையில் தொடங்கி உள்ளதுதான சரி என நினைக்கிறேன். இந்த விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமானது. தொழில்முறை வீரர்கள் என இல்லாமல் அனைவரும் இதை விளையாடலாம். விளையாட்டு வீரர்கள், ஃபிட்னஸ் ஆர்வலர்கள் மற்றும் குடும்பத்தினர் என எல்லோருக்குமான இடமாக 7பேடல் இருக்கும்” என இந்த மையத்தின் திறப்பு விழாவின் போது தோனி தெரிவித்தார்.
பின்னர் தோனி, ருதுராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் பேடல் விளையாட மகிழ்ந்தனர். அந்த வீடியோ இப்பொது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
பேடல்: டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டின் கலவையாக பேடல் அறியப்படுகிறது. 20x10 மீட்டர் அளவு கொண்ட கோர்ட்டில் இது விளையாடப்படும். ராக்கெட் (பேட்) மற்றும் பந்தை கொண்டு இதை விளையாட வேண்டும். இரட்டையர் பிரிவு ஆட்டமாக இது விளையாடப்படுகிறது. இந்தியாவில் இப்போது இந்த விளையாட்டு பிரபலமாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT