Published : 07 Aug 2025 09:42 PM
Last Updated : 07 Aug 2025 09:42 PM
பாரிஸ்: நடப்பு ஆண்டுக்கான Ballon d'Or விருதுக்கான 30 வீரர்கள் அடங்கிய பரிந்துரை தற்போது வெளியாகி உள்ளது. இதில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகலின் ரொனால்டோ பெயர் இடம்பெறவில்லை.
சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் Ballon d'Or விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் எப்போதும் போல அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 2025 வரையிலான வீரர்களின் செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்.
நடப்பு ஆண்டில் இந்த விருதுக்கான பட்டியலில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ பெயர் இடம்பெறவில்லை. இதில் இந்த விருதை அதிக முறை வென்ற வீரராக மெஸ்ஸி அறியப்படுகிறார். 8 முறை இந்த விருதை அவர் வென்றுள்ளார். அதேபோல அதிகபட்சமாக 18 முறை இந்த விருதுக்கான பரிந்துரையில் ரொனால்டோ இடம்பிடித்துள்ளார். அவர் 5 முறை இந்த விருதை வென்றுள்ளார்.
Ballon d’Or 2025 பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார், யார்? - பிரான்ஸின் டெம்பெல்லே, துவே, எம்பாப்பே, இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்கம், ஹாரி கேன், மொரோக்கோவின் ஹக்கிமி, போலந்தின் லெவான்டோவ்ஸ்கி, நார்வே நாட்டின் எர்லிங் ஹாலண்ட், அர்ஜெண்டினாவின் மார்ட்டினஸ், போர்ச்சுகலின் நுனோ மெண்டிஸ், ஜோவை நுவஸ், விதன்ஹா, பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர், ஸ்பெயினின் யமால், பேபியன் ருய்ஸ் மற்றும் எகிப்து நாட்டின் முகமது சாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளது. இவர்களின் கிளப் மற்றும் தேசிய செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த முறை இந்த பட்டியலில் பிஎஸ்ஜி கிளப் அணியை சேர்ந்த 9 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை அந்த அணி வென்றுள்ளது. அதேபோல ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும் பிஎஸ்ஜி விளையாடி இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT