Published : 05 Aug 2025 08:01 AM
Last Updated : 05 Aug 2025 08:01 AM

சிராஜ் அபார பந்துவீச்சு: ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை 6 ரன்களில் இந்தியா வீழ்த்தியது எப்படி?

லண்டன்: முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-2 என டிரா செய்தது.

லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 374 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 76.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. ஹாரி புரூக் 111, ஜோ ரூட் 105 ரன்கள் விளாசினர். ஜேமி ஸ்மித் 2, ஜேமி ஓவர்டன் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

கைவசம் 4 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 35 ரன்​கள் மட்​டுமே தேவை என்ற நிலை​யில் நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை இங்​கிலாந்து அணி தொடர்ந்து விளை​யாடியது. பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் 2 பந்​துகளை​யும் ஜேமி ஓவர்​டன் பவுண்​டரிக்கு விளாசி​னார். அடுத்த ஓவரில் ஜேமி ஸ்மித் (2) மேற்​கொண்டு ரன் ஏதும் சேர்க்​காத நிலை​யில் முகமது சிராஜ் பந்​தில் விக்​கெட் கீப்​பர் துருவ் ஜூரெலிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

இதனால் ஆட்​டத்​தில் பரபரப்பு அதி​க​மானது. இதையடுத்து கஸ் அட்​கின்​சன் களமிறங்​கி​னார். முகமது சிராஜ் தனது அடுத்த ஓவரில் ஜேமி ஓவர்​டனை (9) எல்​பிடள்யூ முறை​யில் வெளி​யேற்​றி​னார்.

இதையடுத்து ஜோஷ் டங்க் களமிறங்க மறு​முனை​யில் கஸ் அட்​கின்​சன் ஒன்​றிரண்டு ரன்​களாக சேர்த்து இந்​திய அணிக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சித்​தார். 83-வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா, ஜோஷ் டங்கை (0) ஸ்டெம்​பு​கள் சிதற வெளி​யேற்​றி​னார். அப்​போது 9 விக்​கெட்​களை இழந்​திருந்த இங்​கிலாந்து அணி​யின் வெற்​றிக்கு 17 ரன்​கள் தேவை​யாக இருந்​தது.

கடைசி வீர​ராக முதல் இன்​னிங்​ஸில் தோள்​பட்​டை​யில் காயம் அடைந்​திருந்த கிறிஸ் வோக்ஸ் களமிறங்​கி​னார். இடது கை முழு​வது​மாக உடலுடன் இணைத்து கட்​டப்​பட்ட நிலை​யில் வலது கையில் மட்​டையை பிடித்​த​படி கிறிஸ்​வோக்ஸ் களத்​துக்​குள் புகுந்​தார். சிராஜ் வீசிய 84-வது ஓவரின் 2-வது பந்தை கஸ் அட்​கின்​சன் லாங் ஆன் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். இதை ஆகாஷ் தீப் எல்​லைக்​கோட்​டுக்கு அருகே பிடிக்க முன்​றார். ஆனால் அவரது கையில் பட்டு பந்து எல்லை கோட்டை தாண்​டியது.

இந்த ஓவரை முழு​மை​யாக எதிர்​கொண்ட கஸ் அட்​கின்​சன், பிரசித் கிருஷ்ணா வீசிய அடுத்த ஓவரிலும் கிறிஸ் வோக்​ஸுக்கு ஸ்டிரைக் கொடுக்​காமல் சமாளித்​தார். தொடர்ந்து முகமது சிராஜ் 143 கிலோ மீட்​டர் வேகத்​தில் வீசிய யார்க்​கர் பந்​தால் அஸ் அட்​கின்​சன் ஆஃப் டெம்ப் சிதற போல்​டா​னார்.

முடி​வில் இங்​கிலாந்து அணி 85.1 ஓவரில் 367 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. கஸ் அட்​கின்​சன் 29 பந்​துகளில், 17 ரன்​கள் சேர்த்​தார். இந்​திய அணி தரப்​பில் முகமது சிராஜ் 30.1 ஓவர்​களை வீசி 6 மெய்​டன்​களு​டன் 104 ரன்​களை வழங்கி 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். பிரசித் கிருஷ்ணா 4 விக்​கெட்​களை​யும், ஆகாஷ் தீப் ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.

6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடரை 2-2 என சமனில் முடித்​தது. லீட்​ஸில் நடை​பெற்ற முதல் டெஸ்​டில் இங்​கிலாந்து அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. பர்​மிங்​காமில் நடை​பெற்ற 2-வது போட்​டி​யில் இந்​திய அணி 336 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்​தது. எனினும் லார்ட்​ஸில் நடை​பெற்ற 3-வது போட்​டி​யில் இந்​திய அணி 22 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. தொடர்ந்து மான்​செஸ்​டரில் நடை​பெற்ற 4-வது போட்டி டிரா​வில் முடிவடைந்​திருந்​தது.

இரு இன்​னிங்​ஸிலும் சேர்த்து 9 விக்​கெட்​கள் வீழ்த்​திய முகமது சிராஜ் ஆட்ட நாயக​னாக தேர்​வா​னார். ஒட்​டுமொத்​த​மாக அவர், இந்த தொடரில் 23 விக்​கெட்​களை வேட்​டை​யாடி அசத்​தி​னார். இந்​திய அணி​யில் தொடர் நாயகன் விருது கேப்​டன் ஷுப்​மன் கில்​லுக்கு வழங்​கப்​பட்​டது. அவர், இந்த தொடரில் 754 ரன்​கள் வேட்​டை​யாடி இருந்​தார். இங்​கிலாந்து அணி​யில்​ தொடர்​ நாயகன்​ விருது ஹாரி புரூக்குக்​கு (481 ரன்​கள்​) வழங்​கப்​பட்​டது.

கற்றுக்கொண்ட பாடம் என்ன? - இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “இரு அணிகளும் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இறுதி நாட்களில் முடிவு தெரியாமல் வந்தோம், இரு அணிகளும் தங்கள் முதல் கிரேடு ஆட்டத்தை வெளிப்படுத்தின. சிராஜ் மற்றும் பிரசித் போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது, கேப்டன்சி எளிதாகத் தெரிகிறது. கடைசி நாளில் நாங்கள் பதிலளித்த விதம் அற்புதமாக இருந்தது. நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம், நேற்று கூட, நாங்கள் அழுத்தத்தில் இருந்ததை அறிந்தோம்.

சிராஜ் ஒரு கேப்டனின் கனவு. அவர், வீசிய ஒவ்வொரு பந்திலும், ஒவ்வொரு ஸ்பெல்லிலும் தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தார். தொடரை 2-2 என நிறைவு செய்தது என்பது ஒரு நியாயமான பிரதிபலிப்பு. இது இரு அணியினரும் எவ்வளவு ஆர்வத்துடன் விளையாடினார்கள், எவ்வளவு சிறப்பாக விளையாடினார்கள் என்பதைக் காட்டுகிறது.

இந்தத் தொடரில் சிறந்த பேட்டராக இருப்பதே எனது நோக்கமாக இருந்தது, அந்த வகையில் எனது செயல் திறன் திருப்திகரமாக இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவும், மன ரீதியாகவும் எப்படி செயல்படுகிறோம் என்பதில் அனைத்தும் உள்ளது. இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. கடந்த ஆறு வாரங்களிலிருந்து கற்றுக்கொண்ட விஷயம் ஒன்றுதான். அது எப்போதும் ஆட்டத்தை விட்டுதரக்கூடாது என்பதுதான்” என்றார்.

முதன் முறையாக..: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம், வெளிநாட்டு மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்று தனித்துவமான சாதனை படைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x