Published : 04 Aug 2025 08:43 AM
Last Updated : 04 Aug 2025 08:43 AM

இங்கிலாந்து வீரர்கள் புரூக், ஜோ ரூட் சதம்: 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்ப்பு

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், ஜோ ரூட் ஆகியோர் சதம் விளாசினர். இங்கிலாந்து அணி 76 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்​நிலை​யில் லண்​டன் கெனிங்​டன் ஓவல் மைதானத்​தில் கடைசி மற்​றும் 5-வது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்​கியது. இந்த போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 224 ரன்​களும், இங்​கிலாந்து அணி 247 ரன்​களும் எடுத்​தன.

2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 396 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 118 ரன்​களும், ஆகாஷ்தீப் 66 ரன்​களும், ரவீந்​திர ஜடேஜா 53 ரன்​களும், வாஷிங்​டன் சுந்​தர் 53 ரன்​களும் குவித்​தனர்.

இங்​கிலாந்து தரப்​பில் ஜோஷ் டங் 5, கஸ் அட்​கின்​சன் 3, ஜேமி ஓவர்​டன் 2 விக்​கெட்​களைச் சாய்த்​தனர். இதைத் தொடர்ந்து 374 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் 2-வது இன்​னிங்ஸை இங்​கிலாந்து விளை​யாடியது.

3-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் இங்​கிலாந்து அணி ஒரு விக்​கெட் இழப்​புக்கு 50 ரன்​கள் எடுத்​திருந்​தது. ஸாக் கிராவ்லி 14 ரன்​களில் சிராஜ் பந்​தில் வீழ்ந்​தார். இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 4-ம் நாள் ஆட்​டத்தை பென் டக்​கெட் 34 ரன்​களு​ட​னும், ஆலி போப் 0 ரன்​களு​ட​னும் தொடங்​கினர்.

அபார​மாக விளை​யாடி பென் டக்​கெட் 54 ரன்​கள் எடுத்​திருந்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

கேப்​டன் ஆலி போப் 27 ரன்​கள் எடுத்​திருந்​த​போது சிராஜ் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார். 106 ரன்​களுக்கு 3 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் 4-வது விக்​கெட்​டுக்கு ஜோ ரூட்​டும், ஹாரி புரூக்​கும் ஜோடி சேர்ந்து இன்​னிங்ஸை கட்​டமைத்​தனர். உணவு இடைவேளை​யின்​போது இங்​கிலாந்​தின் ஸ்கோர் 3 விக்​கெட் இழப்​புக்கு 164 ரன்​களாக இருந்​தது.

ஜோ ரூட் நிதான​மாக விளை​யாட, ஹாரி புரூக் அதிரடி​யாக விளை​யாடி சிக்​ஸர்​களும், பவுண்​டரி​களு​மாக பறக்​க​விட்​டார். இதனால் ஸ்கோர் வெகு​வாக உயர்ந்​தது. அபார​மாக விளை​யாடி ஹாரி புரூக் 91 பந்​துகளில் சதமடித்​தார். அவர் 111 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆகாஷ்தீப் பந்​து​வீச்​சில், சிராஜிடம் பிடி​கொடுத்து வீழ்ந்​தார். 4-வது விக்​கெட்​டுக்கு ஜோ ரூட்​-புரூக் ஜோடி 195 ரன்​கள் சேர்த்​தது.

அதன் பின்​னர் ஜோ ரூட்​டுடன், பெத்​தேல் இணைந்து விளை​யாடத் தொடங்​கி​னார். தேநீர் இடைவேளை​யின்​போது இங்​கிலாந்​தின் ஸ்கோர் 4 விக்​கெட் இழப்​புக்கு 317 ரன்​களாக இருந்​தது. ஜேக்​கப் பெத்​தேல் ஒரு ரன்​னும், ரூட் 98 ரன்​களும் எடுத்​திருந்​தனர்.

தேநீர் இடைவேளைக்​குப் பின்​னரும் அபார​மாக விளை​யாடிய ரூட் டெஸ்ட் கிரிக்​கெட்​டில் தனது 39-வது சதத்தை விளாசி​னார்.மறு​முனை​யில் இருந்த ஜேக்​கப் பெத்​தேலை 5 ரன்​களில் வீழ்த்​தி​னார் பிரசித் கிருஷ்ணா.

105 ரன்​களில் சிறப்​பாக விளை​யாடிக் கொண்​டிருந்த ரூட்​டை​யும், வெளி​யேற்​றி​னார் பிரசித் கிருஷ்ணா. இதைத் தொடர்ந்து 76 ஓவர்​களில் இங்​கிலாந்து அணி 6 விக்​கெட் இழப்​புக்கு 339 ரன்​கள் எடுத்​திருந்​தது. வெற்​றிக்கு 35 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் ஜேமி ஓவர்​டன் 0 ரன்​னுட​னும், ஜேமி ஸ்மித்​ 2 ரன்​களு​ட​னும்​ விளை​யாடிக்​ ​கொண்​டிருந்​தனர்​.

19 ரன்களில் தப்பித்த புரூக்: ஹாரி புரூக் 19 ரன்களில் இருந்தபோது பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தை தூக்கியடிக்க அதை எல்லைக் கோட்டுக்கு அருகே இருந்த சிராஜ் பிடித்தார். ஆனால் பிடித்த வேகத்தில் சிராஜ், எல்லைக் கோட்டைத் தாண்டி உள்ளே சென்றுவிட்டார். இதனால் அது சிக்ஸராக அறிவிக்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ஹாரி புரூக், அதிரடியாக விளையாடி சதமடித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x