Published : 03 Aug 2025 10:15 AM
Last Updated : 03 Aug 2025 10:15 AM
கொல்கத்தா: அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும் மெஸ்ஸி சந்திக்கிறார்.
லயோனல் மெஸ்ஸி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தை முன்பதிவு செய்வது உட்பட அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் ஆனால் மெஸ்ஸியிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப் படுத்தலுக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்னும் காத்திருப்பததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
மெஸ்ஸியின் சுற்றுப்பயணம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம், ஒருவேளை இதுதொடர்பான அறிவிப்பு மெஸ்ஸியின் சமூக வலைதள பக்கத்தில் விரைவில் வெளியாகக்கூடும்” என கொல்கத்தா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயணத்திட்டத்தின்படி, லயோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் 12-ம் தேதி இரவு 10 மணியளவில் கொல்கத்தாவுக்கு வந்து சேருவார். இங்கு அவர், இரண்டு பகல், ஒரு இரவு தங்குவார். 13-ம் தேதி காலை 9 மணி அளவில் பிரபலங்களுடன் நடைபெறும் சந்திப்பு நிகழ்ச்சியில் மெஸ்ஸி கலந்து கொள்கிறார். தொடர்ந்து கொல்கத்தா விஐபி சாலையில் உள்ள லேக் டவுன் பூமியில் அமைக்கப்பட்டுள்ள தனது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி திறந்து வைக்கிறார். உலகிலேயே மெஸ்ஸிக்கு வைக்கப்பட்டுள்ள மிக உயரமான சிலையாக இது அமையும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் செல்லும் லயோனல் மெஸ்ஸி, அங்கு பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் இசை நிகழ்ச்சி மற்றும் கோட் (GOAT) கோப்பை போட்டியில் கலந்து கொள்கிறார். சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி ஆயிரக்கணக்கான குழந்தைகளுடன் உரையாடவும் உள்ளார்.
7 பேர் கலந்து கொண்டு விளையாடும் இந்த போட்டியில் சவுரவ் கங்குலி, லியாண்டர் பயஸ், ஜான் ஆபிரகாம், பாய்ச்சுங் பூட்டியா உள்ளிட்டோருடன் இணைந்து லயோனல் மெஸ்ஸி விளையாட உள்ளார். இந்த போட்டி வழக்கம்போல் இல்லாமல் மெதுவான தொடுதல் கொண்டதாக இருக்கும். இந்த போட்டியை காண டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. டிக்கெட்டின் விலை ரூ.3,500 ஆக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் 68 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்ளது.
நிகழ்ச்சியின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மெஸ்ஸியை கவுரவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அன்றைய தினம் மாலையில் அதானி அறக்கட்டளையின் சாந்திகிராம் தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அகமதாபாத் செல்கிறார் மெஸ்ஸி.
தொடர்ந்து டிசம்பர் 14-ம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மெஸ்ஸி கலந்து கொள்கிறார். மாலை 5.30 மணி அளவில் வான்கடே மைதானத்தில் நடைபெறும் கோட் கோப்பை போட்டியில் விளையாடுகிறார். இதற்கிடையே தோனி, விராட் கோலி உள்ளிட்டோருடன் மெஸ்ஸி கிரிக்கெட் விளையாடக்கூடும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்துள்ளனர்.
மும்பை நிகழ்ச்சியின் போது இந்திய கால்பந்து அணியுடன் மெஸ்ஸி கலந்துரையாட உள்ளார். இதைத் தொடர்ந்து 15-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் மெஸ்ஸி. அன்றைய தினம் பிற்பகல் 2.15 மணி அளவில் பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் கோட் கோப்பை போட்டியிலும் மெஸ்ஸி விளையாடுகிறார். 4 நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் இந்தியாவின் அடுத்த தலைமுறை இளம் கால்பந்து வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுடன் மெஸ்ஸி கலந்துரை யாடுகிறார். இந்த நிகழ்ச்சி 30 முதல் 40 நிமிடங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக மெஸ்ஸி கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற கண்காட்சி போட்டி ஒன்றில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் அவர், தற்போது இந்தியா வருகைதர உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT