Published : 03 Aug 2025 10:01 AM
Last Updated : 03 Aug 2025 10:01 AM
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் எடுத்தன. 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 7. சாய் சுதர்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51, ஆகாஷ் தீப் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 3-வது நாளான நேற்று இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. சிறப்பாக விளையாடிய ஆகாஷ் தீப் 70 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் தனது முதல் அரை சதத்தை விளாசினார். அவர், அரை சதம் கடந்ததும் பால்கனியில் இருந்தபடி ஒட்டுமொத்த இந்திய அணியினரும் எழுந்து கைதட்டி பாராட்டினர். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் புன்னகையால் வாழ்த்தினார்.
150பந்துகளில் 107 ரன்கள் விளாசிய இந்த ஜோடியை ஜேமி ஓவர்டன் பிரித்தார். ஆகாஷ் தீப் 94 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமி ஓவர்டன் வீசிய பேக் ஆஃப்தி லென்ந்த் பந்தை லெக் திசையில் அடிக்க முயன்ற போது மட்டை விளிம்பில் பட்டு பேக்வேர்டு பாயின்ட் திசையில் நின்ற கஸ் அட்கின்சனிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து ஷுப்மன் கில் களமிறங்க மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 44 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.
ஜெய்ஸ்வால் 85, ஷுப்மன் கில் 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மதிய உணவுக்கு இடைவேளைக்கு பின்னர் கஸ் அட்கின்சன் வீசிய முதல் பந்திலேயே ஷுப்மன் கில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர், 9 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து கருண் நாயர் களமிறங்கினார். சீராக ரன்கள் சேர்த்த ஜெய்ஸ்வால் 127 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் தனது 6-வது சதத்தை விளாசினார்.
கருண் நாயர் தனக்கு கிடைத்த வாய்ப்பை மீண்டும் ஒரு முறை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் ஆட்டமிழந்தார். 32 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் கஸ் அட்கின்சன் பந்தில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் ஜடேஜா களமிறங்கினார். அற்புதமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 164 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் டங்க் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை விளாசிய போது பேக்வேர்டு பாயின்ட் திசையில் ஜேமி ஓவர்டனிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து துருவ் ஜூரெல் களமிறங்கினார். தேநீர் இடைவேளையில் இந்திய அணி 71 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 26 ரன்களுடனும், துருவ் ஜூரெல் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தேநீர் இடைவேளைக்கு பின்னர் இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள்.
துருவ் ஜூரெல் 46 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமி ஓவர்டன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். ஜடேஜா 72 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இது அவரது 27-வது அரை சதமாக அமைந்தது. 82 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்த 6 ஓவர்களில் ஜடேஜா 53, சிராஜ் 0, வாஷிங்டன் சுந்தர் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 88 ஓவருக்கு 396 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் கஸ் அட்கின்சன் 3, ஜோஷ் டங்க் 5, ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்கள் கைப்பற்றி இருந்தனர்.
இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 13.5 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் கிராவ்லியை சிராஜ் போல்ட் செய்தார். பென் டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 324 ரன்கள் தேவை. இந்தியாவின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT