Published : 01 Aug 2025 05:41 AM
Last Updated : 01 Aug 2025 05:41 AM
புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. புலவாயோ நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 60.3 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கிரெய்க் இர்வின் 39, தஃபட்ஸ்வா சிகா 30, நிக் வெல்ச் 27 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் மேட் ஹன்றி 6, நேதன் ஸ்மித் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்திருந்தது. வில் யங் 41, டேவன் கான்வே 51 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. வில் யங் மேற்கொண்டு ரன்கள் சேர்க்காத நிலையில் முசாராபனி பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஹென்றி நிக்கோல்ஸ் 34, ரச்சின் ரவீந்திரா 2 ரன்களில் நடையை கட்டி
னர். சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட டேவன் கான்வே 170 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் விளாசிய நிலையில் ஷிவாங்கா பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய டேரில் மிட்செல் 119 பந்துகளில், 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 80 ரன்கள் விளாசிய நிலையில் நயம்ஹுரி பந்தில் போல்டானார்.
இவர்களை தொடர்ந்து டாம் பிளண்டெல் 2, மைக்கேல் பிரேஸ்வெல் 9, கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 19, மேட் ஹென்றி 5 ரன்களில் வெளியேறினர். நேதன் ஸ்மித் 22 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். முடிவில் 96.1 ஓவர்களில் 307 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது நியூஸிலாந்து அணி. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசாராபானி 3, தனகா ஷிவாங்கா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
158 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி 13 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT