Published : 28 Jul 2025 06:39 AM
Last Updated : 28 Jul 2025 06:39 AM
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா தியானி வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் ஜெர்மனியின் எசென் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகின்றன. கடைசி நாளான நேற்று மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அங்கிதா பந்தய தூரத்தை 9:31.99 வினாடிகளில் கடந்து 2-வதாக வந்தார். இதையடுத்து அவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். ஜெர்மனி வீராங்கனை அடியா புட்டே 9:33.34 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார். இந்தப் பிரிவில் பின்லாந்தின் இலோனா மரியா 9:31.86 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
ரோட்டரி ஒலிம்பியாட்: 1,500 மாணவர்கள் பங்கேற்பு: சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ரோட்டரி ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் 70க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, தங்களது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியை இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் (தெற்கு கமாண்ட்) கரன்பீர் சிங் பிரார் தொடங்கி வைத்தார். சென்னை ரோட்டரி சர்வதேச மாவட்டம்-3234 சார்பில் நடத்தப்பட்ட இந்த ரோட்டரி ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியில் பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றன. சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நிறைவடைந்த இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சென்னையில் இன்று முதல் தேசிய சப்-ஜூனியர் ஹாக்கி: சென்னையில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை 15-வது தேசிய சப்-ஜூனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டியில் தமிழ்நாடு உட்பட மொத்தம் 29 மாநில அணிகள் போட்டியில் பங்கேற்கவுள்ளன. போட்டி தொடக்க விழாவில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் திலீப் டிர்க்கி, ஹாக்கி இந்தியா அமைப்பின் பொதுச் செயலர் போலாநாத் சிங், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்டிஏடி) உறுப்பினர்-செயலர் ஜே.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT