Published : 24 Jul 2025 09:37 AM
Last Updated : 24 Jul 2025 09:37 AM
மான்செஸ்டர்: இங்கிலாந்து உடனான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் முறையில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் வெளியேறினார். இந்நிலையில், அவர் மீண்டும் களத்துக்கு பேட் செய்ய வருவாரா என்பது குறித்து விதிகள் சொல்வதை பார்ப்போம்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸை இழந்த இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. ராகுல் 46, ஜெய்ஸ்வால் 58, ஷுப்மன் கில் 12, சாய் சுதர்ஷன் 61 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்குர் தலா 19 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர்.
ரிஷப் பந்த் காயம்: முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்கு பிறகு ரிஷப் பந்த் மற்றும் சாய் சுதர்ஷன் இணைந்து ரன் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸின் 68-வது ஓவரை இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் வீசினார். அந்த ஓவரில் 4-வது பந்தை ஸ்வீப் ஆட முயன்று பந்தை ரிஷப் பந்த் மிஸ் செய்தார். அது அவரது வலது காலில் பட்டது.
இங்கிலாந்து அணி ரிவ்யூ செய்ததில் பந்து முதலில் பேட்டில் பட்டது தெரியவந்தது. மறுபக்கம் ரிஷப் பந்த் வலியால் துடித்தார். அவரது வலது கால் பகுதி வீக்கம் அடைந்தது. அதோடு அவரது பாதத்தில் இருந்து ரத்தம் வந்தது. இதையடுத்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் அவர் களத்தில் இருந்து வெளியேறினார். அவரால் நடக்க முடியாத காரணத்தால் வாகனம் மூலம் பெவிலியன் திரும்பினார். 48 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் காயத்தால் ரிஷப் பந்த் வெளியேறினார்.
விதிகள் சொல்வது என்ன? - ஐசிசி விளையாட்டு விதிகளின் படி ரிஷப் பந்த் மீண்டும் பேட் செய்ய வரலாம். காயம், இயலாமை அல்லது தவிர்க்க முடியாத காரணத்தால் பேட்ஸ்மேன் களத்தில் இருந்து வெளியேறினால் ஐசிசி விதியின் செக்ஷன் 24.4 பிரிவின் கீழ் அவர் மீண்டும் பேட் செய்ய அனுமதிக்கப்படுவார். விக்கெட் விழுந்ததும் காயத்தால் வெளியேறிய பேட்ஸ்மேன் களத்துக்கு திரும்பி, இன்னிங்ஸை தொடரலாம்.
பிசிசிஐ சொல்வது என்ன? - ரிஷப் பந்த் காயமடைந்த நிலையில் அவரை ஸ்கேன் பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அவரை இந்திய அணியின் மருத்துவர் குழு கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. கடந்த போட்டியில் (லார்ட்ஸ் டெஸ்ட்) கை விரலில் பந்த் காயமடைந்தார். இப்போது காலில் காயமடைந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT