Published : 23 Jul 2025 03:35 PM
Last Updated : 23 Jul 2025 03:35 PM

இந்தியாவின் அடுத்த ஆல்ரவுண்டர் இவர் தான்: வாஷிங்டன் சுந்தர் மீது பந்தயம் கட்டும் ரவிசாஸ்திரி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தன் பயிற்சியின் கீழ் தைரியமாகக் களமிறக்கிய வாஷிங்டன் சுந்தர் தான் இந்தியாவின் அடுத்த பெரிய ஆல்ரவுண்டர் என்று கூறுகிறார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் பிரிஸ்பனில் 2021-ம் ஆண்டு கிராண்ட் அறிமுகப் போட்டியில் களமிறங்கினார் வாஷிங்டன் சுந்தர். அறிமுகப் போட்டியிலேயே பேட்டிங் பவுலிங் இரண்டிலும் கலக்கினார். இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் வாஷிங்டன். சில முக்கியமான பேட்டிங் இன்னிங்ஸ்களையும் ஆடி கடினமான சூழ்நிலைகளில் பெரும் பங்களிப்பு செய்தார்.

ஒரு விதத்தில் நடந்து முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு தன் 4 விக்கெட்டுகள் மூலம் வெற்றி வாய்ப்பை உருவாக்கியவரே வாஷிங்டன் சுந்தர்தான்.

இந்நிலையில் தற்போது வர்ணனையில் இருக்கும் ரவி சாஸ்திரி, “நான் எப்போதுமே வாஷிங்டன் சுந்தரை நேசிக்கிறேன். அவரை சந்தித்த அந்த முதல் நாளிலிருந்தே... இவர்தான்... இவர்தான் இந்திய அணியின் அடுத்த உண்மையான ஆல்ரவுண்டர் என்று நினைத்தேன். அதுவும் இந்தியாவுக்காக பலப்பல ஆண்டுகள் இவர் உண்மையான ஆல்ரவுண்டராகத் திகழ்வார் என்று கருதினேன்.

இப்போதுதான் அவருக்கு 25 வயதாகிறது. இன்னும் நீண்ட தொலைவு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயணிக்க வேண்டும். பந்துகள் ஸ்பின் ஆகித் திரும்பும் இந்தியப் பிட்ச்களில் அவர் அபாயகரமான பவுலர். நியூஸிலாந்து இந்தியாவில் இவரை ஆடிய போது இவரது திறமையைப் பார்ததோம். மூத்த ஸ்பின்னர்களே ஒன்றுமில்லை என்னும் அளவுக்கு சுந்தர் வீசியதையும் பார்த்தோம்.

நன்றாக பந்து வீசுவதோடு, அருமையாக பேட்டிங்கும் செய்கிறார். அவர் நம்பிக்கை பெறப் பெற அவர் மென்மேலும் சிறப்படைந்து வளர்வார். வெளிநாட்டு பிட்ச்களிலும் கூட அவருக்கு ஸ்பின் பந்து வீச்சில் ட்ரிஃப்ட் கிடைக்கிறது. அவரது பந்துகளில் தேவைப்படும் அளவுக்கு வேகம் உள்ளது, பேட்டருக்குத் தக்கவாறு பந்தின் வேகத்தை கூட்டி இறக்கி வித்தை காட்டுகிறார்.

விரல்களில் வித்தையை வைத்திருப்பவர் வாஷிங்டன் சுந்தர். வலுவான விரல்கள் அவருக்கு. நீண்ட நேரம் ஓவர்களையும் அவரால் வீச முடியும். சில வேளைகளில் ரன்களைக் கட்டுப்படுத்தும் வேலையையும் அவரால் திறம்படச் செய்ய முடியும்.” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் ரவி சாஸ்திரி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x