Published : 23 Jul 2025 02:34 AM
Last Updated : 23 Jul 2025 02:34 AM

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்பு

சென்னை: இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியின் 3-வது சீசன் வரும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இம்முறை போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசுத் தொகையும் ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபாரெஸ்ட், அமெரிக்காவின் லியாங் அவோன்டர், ஜெர்மனி யின் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் ரே ராப்சன், ரஷ்யாவின் விளாடிமிர் ஃபெடோசீவ் மற்றும் 2024-ல் சேலஞ்சர்ஸ் பிரிவில் வென்றதன் மூலம் முன்னேறியுள்ள இந்தியாவின் வி.பிரணவ் ஆகியோர் மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்கின்றனர்.

இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்களை புக்மைஷோ இணையதளம் வாயிலாக பெறலாம். டிக்கெட்டின் தொடக்க விலை ரூ.750 ஆகும். விஐபி டிக்கெட் விலை ரூ.3,500 ஆகும். சேலஞ்சர்ஸ் பிரிவில் இந்தியாவின் கார்த்திகேயன் முரளி, லியோன் மென்டோன்சா, ஆர்.வைஷாலி, ஹரிகா துரோணவள்ளி, அபிமன்யு புராணிக், ஆர்யன் சோப்ரா, அதிபன் பாஸ்கரன், பி.இனியன், தீப்தயன் கோஷ் மற்றும் எம்.பிரனேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.25 லட்சமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு முறையே ரூ.15 லட்சமும், ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும். சேலஞ்சர்ஸ் வெற்றியாளருக்கு ரூ.7 லட்சமும், 2026-ம் ஆண்டு மாஸ்டர்ஸ் போட்டியில் விளையாடுவதற்கான இடமும் வழங்கப்படும். மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவர் 24.5 ஃபிடே சர்க்யூட் புள்ளிகளை பெறுவார்.

இந்த புள்ளிகள் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமானதாகும். கூட்டு வெற்றியாளர்களாக இருந்தால் ஒவ்வொருவருக்கும் தலா 22.3 புள்ளிகள் கிடைக்கும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு முறையே 17.8 மற்றும் 15.6 புள்ளிகள் கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x