Published : 21 Jul 2025 06:19 AM
Last Updated : 21 Jul 2025 06:19 AM
புதுடெல்லி: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியில் 2 வீரர்கள் காயமடைந்துள்ளதால் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் காம்போஜ் இணையவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் காயம் அடைந்துள்ளனர். ஆகாஷ் தீப் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர், 4-வது போட்டிக்கு முன்னதாக முழுவதும் குணமடைவாரா என்பது தெரியவில்லை. அவரது உடல்நிலையை இந்திய அணி நிர்வாகம் கவனித்து வருகிறது. அதேநேரத்தில் அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் 4-வது போட்டியில் விளையாட முடியாத நிலை உருவாகி உள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய தேர்வுக்குழுவினர் அன்ஷுல் காம்போஜை மாற்று வீரராக அணியில் சேர்த்துள்ளனர். இவர் 4-வது போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து சென்று இந்திய அணியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.அன்ஷுல் காம்போஜ் சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 2 அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி இருந்தார். அப்போது 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT