Published : 18 Jul 2025 01:27 AM
Last Updated : 18 Jul 2025 01:27 AM

சென்னையில் அக். 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி

சென்னை: சென்னையில் அக்டோபர் 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி(டபிள்யூடிஏ) நடைபெறவுள்ளது.

அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த மகளிர் டென்னிஸ் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 32 வீராங்கனைகளும் (ஒற்றையர் பிரிவு), இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் பங்கேற்று விளையாட உள்ளனர். போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு 250 புள்ளிகள் வழங்கப்படும். சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ.2.40 கோடியாக உள்ளது.

இந்நிலையில் போட்டி குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக அரசு இந்த ஆண்டு சென்னையில் டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டியை நடத்த ரூ.12 கோடியை ஒதுக்கியுள்ளது. அண்மையில் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் பெயரில் பார்வையாளர் மாடம் திறக்கப் பட்ட நிலையில், அங்கு போட்டிகள் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், சென்னை ஓபன் டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டி 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னையில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவை வழங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் கூறும்போது, “சென்னையில் நடைபெறும் போட்டியில் சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் உள்ள வீராங்கனைகள் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்டிஏடி) வீராங்கனைகள் மீது அக்கறை கொண்டு பல்வேறு முன்னெடுப்பு களை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது” என்றார்.

நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் செயலாளர் பி.வெங்கடசுப்ரமணியம், பொருளாளர் டோட்லா விவேக் குமார் ரெட்டி, போட்டியின் இயக்குநர் ஹிதன் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் கடைசியாக 2022-ல் டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவில் லிண்டா ஃபிருஹவிர்டோவாவும், கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி, லூயிசா ஸ்டெபானி ஜோடி இரட்டையர் பட்டத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x