Published : 09 Jul 2025 01:24 PM
Last Updated : 09 Jul 2025 01:24 PM
இங்கிலாந்து U-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா U-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமாகத் திகழ்ந்தார். சூர்யவன்ஷி இந்தத் தொடரில் சதம் மற்றும் அரைசதங்களும் 355 ரன்கள் எடுத்தது சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டுடன் சேர்ந்து இளையோர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனையாகத் திகழ்கிறது.
ஐபிஎல் 2025-ல் புதிதாக எழுச்சி கண்ட இளம் நட்சத்திரமான 14 வயது வைபவ் சூரியவன்ஷி தன் ஆட்டம் வெறுமனே வாச்சாம்பொழச்சான் ஆட்டம் அல்ல, சர்வதேச அளவிலும் இதே போல் ஆட முடியும் என்பதை நிரூபித்தத் தொடராகும் இது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய இளையோர் அணி, இங்கிலாந்து இளையோர் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது, சூர்யவன்ஷி நட்சத்திர வீரராக உருவெடுத்தார். அவர் ஐந்து போட்டிகளில் 71 சராசரி மற்றும் 174.01 ஸ்ட்ரைக்-ரேட்டுடன் 355 ரன்கள் குவித்துள்ளார். இது இருதரப்பு இளையோர் ஒருநாள் சர்வதேசத் தொடரில் அதிகபட்ச ரன் எண்ணிக்கையாகும். மேலும் தொடக்க வீரராக 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
முக்கியமான சாதனி என்னவெனில் 300 ரன்களுக்கும் மேல் 174 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு தொடரில் எடுத்த வகையில் சூரியவன்ஷியின் சாதனை தனித்துவமானது. வங்கதேச வீரர் தவ்ஹித் ஹிருதய் இதற்கு முன்னர் இளையோர் ஒருநாள் சர்வதேசத் தொடரில் 300 ரன்களுக்கும் மேல் எடுத்ததில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 114.62 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், நான்காவது ஒருநாள் போட்டியில் சூர்யவன்ஷி அடித்த சதம், வெறும் 52 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியதால், இளைஞர் ஒருநாள் வரலாற்றில் அதிவேக சதமாகும். அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து 183.33 ஸ்ட்ரைக் ரேட்டில் என்பது 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தானின் கம்ரான் குமல் 66 பந்துகளில் 102 ரன்களை 182.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் படைத்த சாதனையை முறியடித்தது.
முன்னதாக, அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 31 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார் (ஸ்ட்ரைக் ரேட் 277.41), இது இளைஞர் ஒருநாள் வரலாற்றில் மிக விரைவான 80+ ரன்கள் ஆகும், இதன் மூலம் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் சூரியவன்ஷி. 2004 U-19 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 236.84 என்ற விகிதத்தில் 38 பந்துகளில் 90 ரன்களை சுரேஷ் ரெய்னா எடுத்தது குறிப்பிடத்தக்கது.
வைபவ் சூரியவன்ஷியின் இத்தகைய சாதனைகள் இந்த இளம் வயதில் இந்திய டி20 மற்றும் ஒரு நாள் அணியில் விரைவில் இடம்பெறுவதற்கான வழிகளைத் திறந்து விட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT