Published : 09 Jul 2025 06:30 AM
Last Updated : 09 Jul 2025 06:30 AM
புலவாயோ: தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோ நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 114 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வியான் முல்டர் 367 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார்.
இதையடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 2-வது நாள் ஆட்டத்தில் 43 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக சீயன் வில்லியம்ஸ் 83, வெஸ்லி மாதவரே 25, கேப்டன் கிரெய்க் இர்வின் 17 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் பிரெனலன் சுப்ராயன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். கோடி யூசுப், வியான் முல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
பாலோ ஆன் பெற்ற ஜிம்பாப்வே அணி 456 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. தகுட்ஸ்வானாஷே கைடானோ 34, நிக் வெல்ச் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 77.3 ஓவர்களில் 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக நிக் வெல்ச் 50, கேப்டன் கிரெய்க் இர்வின் 49, தகுட்ஸ்வானாஷே கைடானோ 40 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கார்பின் போஷ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். செனுரான் முத்துசாமி 3 விக்கெட்களையும், கோடி யூசுப் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக 2-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக வியான் முல்டர் தேர்வானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT