Published : 01 Jul 2025 07:35 AM
Last Updated : 01 Jul 2025 07:35 AM
லண்டன்: கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் மிகவும் புகழ் வாய்ந்த விம்பிள்டன் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ, 117-ம் நிலை வீரரான டென்மார்க்கின் எல்மர் மோலரை எதிர்த்து விளையாடினார். இதில் தியாஃபோ 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
9-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், 6-ம் நிலை வீரரான பிரான்சின் பெஞ்சமின் போன்சியுடன் மோதினார். 3 மணி நேரம் 7 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெஞ்சமின் போன்சி 7-6 (7-2). 3-6, 7-6(7-3), 6-2 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் டேனியல் மேத்வதேவை வீழ்த்தினார்.
24-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ், 113-ம் நிலை வீரரான பிரான்ஸின் வாலண்டைன் ராயருடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 3-6, 2-6 என்ற செட் கணக்கில் பின்தங்கியிருந்த நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் வாலண்டைன் ராயர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 194-ம் நிலை வீராங்கனையான கனடாவின் கார்சன் பிரான்ஸ்டைனுடன் மோதினார். இதில் அரினா சபலெங்கா 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 14-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் 75-ம் நிலை வீராங்கனையான ஹங்கேரியின் அனா போன்டரை தோற்கடித்தார்.
20-ம் நிலை வீராங்கனையான ஜெலினா ஒஸ்டபென்கோ 5-7, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் 51-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் சோனே கர்தாவிடம் தோல்வி அடைந்தார். இரு முறை விம்பிள்டனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த துனிசியாவின் ஜபூர், பல் கேரியாவின் விக்டோரியா டோமோவாவுடன் மோதினார். இதில் ஜபூர் 6-7 (5-7). 0-2 என பின்தங்கிய நிலையில் இருந்த நிலையில் திடீரென போட்டியில் இருந்து விலகினார். இதில் விக்டோரியா டோமோவா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT