Published : 28 Jun 2025 08:10 PM
Last Updated : 28 Jun 2025 08:10 PM
லண்டன்: இங்கிலாந்து அணி உடன் ஹெட்டிங்கிலியில் முதல் டெஸ்ட் போட்டியில் தனது பந்து வீச்சு சொதப்பலுக்கு தானே முழு பொறுப்பேற்பதாக இந்திய பவுலர் பிரசித் கிருஷ்ணா கூறியுள்ளார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளில் தோல்வியை தழுவியது. இதில் இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக 35 ஓவர்கள் வீசி 210 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார் பிரசித் கிருஷ்ணா. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தாலும் எக்கானமி 6-க்கு மேல் இருந்தது. இதனால் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
“முதல் இன்னிங்ஸில் நான் பந்து வீச விரும்பிய லெந்தில் என்னால் பந்து வீச முடியவில்லை. நான் கொஞ்சம் ஷாட்டாக வீசி இருந்தேன். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் என்னால் சிறந்து செயல்பட முடிந்தது. அதற்கு ஆடுகளம் ஸ்லோவாக இருந்தது காரணம். நான் விக்கெட் வீழ்த்த விரும்புகிறேன். அதற்கு தகுந்த வகையில் தான் எனது பீல்ட் செட்-அப், லைன் மற்றும் லெந்த் போன்றவை இருக்கும்.
ஒவ்வொரு முறையும் நான் பந்து வீசும் வரும்போது அதை மெய்டன் ஓவராக தான் வீச விரும்புகிறேன். ஹெட்டிங்கிலியில் அவுட்-பீல்ட் கொஞ்சம் வேகமாக இருந்தது. தவிர நான் வீசிய லைன் மற்றும் லெந்த் துல்லியமானதாக இல்லை. நான் துல்லியமாக பந்து வீசி இருக்க வேண்டும். அதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன். எனது பந்து வீச்சில் சில எட்ஜ் ஆகி பவுண்டரிக்கு சென்றது. அதேபோல பவுன்ஸர் வீச முயன்று ரன்களை கொடுத்தேன். நிச்சயம் எனது எக்கானமியை குறைக்கவே விரும்புகிறேன். அணியில் உள்ள அனுபவ வீரர்கள் உடன் அதிகம் பேசி வருகிறோம். நிச்சயம் இது எங்களுக்கு கற்றல் ரீதியான அனுபவத்தை தரும் என நம்புகிறோம்.
அனுபவம் என்பதை நாம் விளையாட விளையாட தான் பெற முடியும். அணியில் உள்ள இளம் வீரர்கள் எல்லோரும் அதற்கான ஆர்வத்துடன் உள்ளோம். எங்களில் யார் அணிக்குள் வந்தாலும், பிற்பாதியில் என்ன நடந்தாலும் அது எங்களுக்கு வாய்ப்பாகவே இருக்கும்” என பிரசித் கிருஷ்ணா கூறியுள்ளார். இங்கிலாந்து ஆடுகளத்தில் அவரது 6.2 அடி உயரம் பந்து வீச்சுக்கு பெரிய அளவில் உதவும் என நம்பப்படுகிறது. அதை அடுத்தடுத்த போட்டியில் பிரசித் நிரூபித்து காட்டுவார் என நம்புவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT