Published : 28 Jun 2025 08:33 AM
Last Updated : 28 Jun 2025 08:33 AM
கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க வங்கதேச அணி போராடி வருகிறது.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் விளையாடிய வங்கதேசம் 79.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி, 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று 3-ம் நாள் ஆட்டத்தை பதும் நிசங்கா 146 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 5 ரன்களுடனும் தொடங்கினர். பதும் நிசங்கா 158 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பிரபாத் ஜெயசூர்யா 10 ரன்களும், தனஞ்செய டி சில்வா 7 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 33 ரன்களும் எடுத்து வீழ்ந்தனர்.
ஆனால் குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 87 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். 116.5 ஓவர்களில் 458 ரன்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது. தைஜுல் இஸ்லாம் 5, நயீம் ஹசன் 3, நஹித் ராணா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை வங்கதேச அணி தொடர்ந்து விளையாடியது. ஆனால், இலங்கை வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் அந்த அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
ஷத்மான் இஸ்லாம் 12, அனாமுல் ஹக் 19, மோமினுல் ஹக் 15, நஜில் ஹொசைன் ஷன்டோ 19, முஷ்பிகுர் ரஹிம் 26, மெஹதி ஹசன் மிராஸ் 11 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். லிட்டன் தாஸ் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். தற்போது 96 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க வங்கதேச அணி போராடி வருகிறது.
இலங்கை தரப்பில் தனஞ்செய டி சில்வா, பிரபாத் ஜெயசூர்ய ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். தரிந்து ரத்னாயக, அசிதா பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT