Published : 28 Jun 2025 07:46 AM
Last Updated : 28 Jun 2025 07:46 AM
தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தான் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் இந்த மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வந்தது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஆர்.பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடினர்.
இந்தப் போட்டியின் 10 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரவ், மற்றொரு உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சின்டரோவ் ஆகியோர் தலா 5.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தனர். இதையடுத்து சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது. 2 சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும், சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு சுமார் ரூ.17 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச செஸ் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள குகேஷை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். அவர் தற்போது 2778.3 புள்ளிகளைப் பெற்றுள்ளார். குகேஷ் 2776.6 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம் வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் முதல் 5 இடங்களுக்குள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT