Published : 27 Jun 2025 11:48 AM
Last Updated : 27 Jun 2025 11:48 AM
இந்தியா யு-19 வீரர், சவுராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்வன்ஷ் சிங் பங்காலியா அடுத்த ரிஷப் பண்ட் என்று பேசப்பட்டு வருகிறார். இவரும் விக்கெட் கீப்பர்/பேட்டர்தான் ஆனால், இவர் இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிரான வார்ம் அப் போட்டியில் 52 பந்துகளில் 103 ரன்களை விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
ஹர்வன்ஷ் இறங்கும் போது இந்தியா யு-19 அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்திருந்தது. ஹர்வன்ஷ் சிங்குடன் அப்போது ஆர்.எஸ்.அம்பிரீஷ் என்ற இளம் வீரர் கிரீசில் இருந்தார், இருவரும் சேர்ந்து 126 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.. அம்பிரீஷும் அதிரடி முறையில் 47 பந்துகளில் 72 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அப்போது ஹர்வன்ஷ் சிங் பங்காலியா 33 பந்துகளில் 47 ரன்களில் இருந்தார். ஒரு பவுண்டரி மூலம் அரைசதம் கண்ட இவர் அதன் பிறகு பேயாட்டம் ஆடிவிட்டார்.
கடைசி 3 ஓவர்களில் செம விளாசல் விளாசி அடுத்த 18 பந்துகளில் இன்னொரு அரைசதம் கண்டு 52 பந்துகளில் 103 நாட் அவுட் என்று திகழ்ந்தார். அதுவும் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 3 டவரிங் சிக்சர்களை அடித்து அசத்தி விட்டார். இதில் கடைசி சிக்ஸ்தான் சத ஷாட். மொத்தம் 9 சிக்சர்களை இவர் விளாச இந்திய யு-19 அணி 442 ரன்களை குவித்தது.
ஹர்வன்ஷ் சிங் பங்காலியா ஏற்கெனவே அக்டோபரில் இளையோர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 117 ரன்களை விரைவு கதியில் விளாசி அதில் 7 பவுண்டரிகள் 6 சிக்சர்களை விளாசி தலைப்புச் செய்தியில் இடம்பெற்றவர்தான்.
யார் இந்த ஹர்வன்ஷ் சிங் பங்காலியா? குஜராத்தின் சிறிய ஊரான காந்திதாமைச் சேர்ந்தவர்தான் இந்த ஹர்வன்ஷ் சிங் பங்காலியா. இவரது தந்தை தமந்தீப் சிங், மாமா கன்வராஜீத் சிங் இருவரும் டவுனில் கிரிக்கெட் ஆடுபவர்கள். இருவருமே விக்கெட் கீப்பர்கள். இப்போது ஹர்வன்ஷ் சிங் குடும்பம் கனடாவில் செட்டில் ஆகியுள்ளனர். ஹர்வன்ஷ் சிங் மட்டும் தாயாருடன் காந்திதாமில் இருக்கிறார். சவுராஷ்டிரா அணிக்கு ஆடுகிறார். ஒரு நாள் தந்தையை இந்தியாவுக்கு மீண்டும் கூட்டி வருவேன் என்று ஹர்வன்ஷ் உறுதி கூறினாராம்.
யுவராஜ் சிங் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராடை ஒரே ஓவரில் அடித்த அந்த 6 சிக்சர்களைப் பார்த்தது முதல் ஹர்வன்ஷ் சிங் பங்காலியா தானும் ஒருநாள் இந்தியாவுக்காக ஆடுவேன் என்று உத்வேகம் பெற்றதாக தந்தை தமந்தீப் சிங் ஊடகம் ஒன்றில் தெரிவித்தார்.
6 வயதில் தமந்தீப் இவரை சவுராஷ்ட்ரா கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து விட்டார். யுவராஜ் சிங்கைப் பார்த்து இடது கை பேட்டர் ஆனதாக தந்தை தமந்தீப் சிங் கூறுகிறார். யுவராஜ் சிங்கின் மிகப்பெரிய விசிறியானார் ஹர்வன்ஷ் என்று கூறிய தனதை தமந்தீப் பிராடை யுவராஜ் அடுத்த 6 சிக்சர்கள்தான் ஹர்வன்ஷிற்கு பெரிய உத்வேகம் மற்றும் அகத்தூண்டுதல் என்கிறார். இப்போது இவரை அடுத்த ரிஷப் பண்ட் ரெடி என்பது போல்தான் கிரிக்கெட் உலகில் பேசுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT