Last Updated : 25 Jun, 2025 10:43 PM

1  

Published : 25 Jun 2025 10:43 PM
Last Updated : 25 Jun 2025 10:43 PM

லாரி ஓட்டுநரின் மகன் அதிரடி ஆட்டம்: இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய யு19 அணி!

ஹர்வன்ஷ் பங்காலியா | கோப்புப்படம்

லண்டன்: இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து யங் லயன்ஸ் அணியை 231 ரன்களில் வீழ்த்தி உள்ளது இந்திய யு19 அணி. இந்திய அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் லாரி ஓட்டுநரின் மகனான ஹர்வன்ஷ் சிங் பங்காலியா என்ற 18 வயது இளம் வீரர். தனது அதிரடி பேட்டிங் மூலம் இப்போது பலரது கவனத்தை பெற்றுள்ளார்.

இந்திய ஆடவர் சீனியர் அணி, இந்திய மகளிர் அணி, இந்திய யு19 ஆடவர் அணி என ஒரே நேரத்தில் மூன்று அணிகள் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளன. இதில் ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்திய மகளிர் அணி 28-ம் தேதி தொடங்க உள்ள டி20 தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழலில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே தலைமையில் இங்கிலாந்துக்கு இந்திய யு19 அணியும் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா யு19 மற்றும் இங்கிலாந்து யு19 அணிகள் விளையாடுகின்றன. ஜூன் 27 முதல் ஜூலை 23-ம் தேதி வரையில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

இங்கிலாந்து யங் லயன்ஸ் உடன் பயிற்சி ஆட்டம்: இந்த தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து யங் லயன்ஸ் அணி உடன் பயிற்சி ஆட்டத்தில் இந்திய யு19 அணி விளையாடியது. செவ்வாய்க்கிழமை அன்று லஃவ்பெரா நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் இந்திய யு19 அணி பேட் செய்து 50 ஓவர்களில் 444 ரன்கள் சேர்த்தது.

இதில் 52 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்தார் இந்தியாவின் ஹர்வன்ஷ் பங்காலியா. அவரது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மாற்று 9 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணி தரப்பில் ராகுல் குமார், கனிஷ்க் சவுகான், ஆர்.எஸ்.அம்பிரிஷ் ஆகியோர் அரைசதம் கடந்தனர். பெரிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி அதில் தோல்வியை தழுவியது. இந்திய யு19 அணி இந்த ஆட்டத்தில் 231 ரன்களில் வென்றது.

யார் இந்த ஹர்வன்ஷ் பங்காலியா? - 18 வயது ஹர்வன்ஷ் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் கட்ச் பகுதியில் உள்ள காந்திதாமை சேர்ந்தவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்தான் அவரது ரோல். இடது-கை ஆட்டக்காரர். அங்கு தான் அவரது ஆரம்பகால கிரிக்கெட் பயிற்சி தொடங்கியது. தற்போது அவரது குடும்பம் கனடாவில் வசித்து வருகிறது. அங்கு அவரது தந்தை லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சவுராஷ்டிரா இளையோர் அணிக்காக பல்வேறு வயது பிரிவில் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவரது சர்வதேச இளையோர் கிரிக்கெட் பயணம் தொடங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x