Published : 25 Jun 2025 12:21 AM
Last Updated : 25 Jun 2025 12:21 AM
லீட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பென் டக்கெட் விளாசிய சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் குவித்தன. 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தில் 96 ஓவர்களில் 364 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 137, ரிஷப் பந்த் 118 ரன்கள் சேர்த்தனர்.
371 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்தது. பென் டக்கெட் 9, ஸாக் கிராவ்லி 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 10 விக்கெட்கள் முழுமையாக இருந்த நிலையில் வெற்றிக்கு மேற்கொண்டு 350 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணி நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது.
ஸாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சீராக ரன்கள் சேர்த்தனர். மட்டையை சுழற்றிய பென் டக்கெட் 121 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது 6-வது சதமாக அமைந்தது. மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஸாக் கிராவ்லி 111 பந்துகளில் தனது 17-வது அரை சதத்தை கடந்தார். இங்கிலாந்து அணி 40.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
22 நிமிடங்களுக்கு பிறகு மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில் ஸாக் கிராவ்லி 126 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் முதல் சிலிப் திசையில் நின்ற கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு ஸாக் கிராவ்லி, பென் டக்கெட் ஜோடி 42.2 ஓவர்களில் 188 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆலி போப் 8 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் சேர்த்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் போல்டானார்.
இதைத் தொடர்ந்து ஜோ ரூட் களமிறங்கினார். 54 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 253 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி பயணிக்க தொடங்கியது. அந்த சூழ்நிலையில் குறைந்தது 42 ஓவர்கள் மீதம் இருந்தது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மேற்கொண்டு 118 ரன்கள் தேவையாக இருந்தது. ஷர்துல் தாக்குர் வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தார்.
அபாரமாக விளையாடி வந்த பென் டக்கெட் 170 பந்துகளில், 21 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 149 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்குர் வீசிய பந்தை கவர் திசையில் அடித்த போது பதிலி வீரரான நித்திஷ் குமார் ரெட்டியிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் லெக் திசையில் வீசிய பந்தை ஸ்டெம்புக்கு பின்புறம் தட்டிவிட முயன்றார். ஆனால் ரிஷப் பந்த் அற்புதமாக கேட்ச் செய்தார்.
இதன் பின்னர் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். இங்கிலாந்து அணி 58.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 102 ரன்கள் தேவையாக இருந்தது. குறைந்தது 37.3 ஓவர்கள் மீதம் இருந்தன. 30 நிமிடங்களுக்கு பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. பிறகு 51 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில், ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து பென் ஸ்டோக்ஸ் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஜேமி ஸ்மித் 44 ரன்கள் எடுத்தார். இப்படியாக 82 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT