Published : 24 Jun 2025 07:58 PM
Last Updated : 24 Jun 2025 07:58 PM
லீட்ஸ்: இந்திய அணி உடனான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையை எட்டியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பென் டக்கெட் மற்றும் ஸாக் கிராவ்லி இணைந்து 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
இந்த ஆட்டத்தில் 371 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டி வருகிறது. 5-ம் நாள் ஆட்டத்தை 6 ஓவர்களுக்கு 21 ரன்கள் என்ற நிலையில் தொடங்கியது. ஒவ்வொரு செஷனாக ஆட்டத்தை அணுகுவது இங்கிலாந்து அணியின் திட்டமாக இருந்திருக்கும். அந்த வகையில் முதல் செஷனில் 96 ரன்கள் எடுத்தது.
மதிய உணவு நேர இடைவேளைக்கு பிறகு ரன் ரேட்டில் சற்றே வேகம் கூட்டியது இங்கிலாந்து அணி. 40 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 177 ரன்கள் எடுத்திருந்தது. டக்கெட் 103 ரன்கள், கிராவ்லி 57 ரன்கள் எடுத்தனர். அதற்கடுத்த ஓவரை சிராஜ் வீசினார். அப்போது மழை காரணமாக சில நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அது இந்திய அணிக்கு சற்று ஆறுதல் தரும் வகையில் அமைந்தது.
பிரசித் கிருஷ்ணா கொடுத்த இம்பேக்ட்: மழைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியதும் 2-வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். அந்த ஓவரில் 126 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்த கிராவ்லி விக்கெட்டை கைப்பற்றினார் பிரசித். ஸ்லிப் பீல்டராக நின்ற கே.எல்.ராகுல் கேட்ச் எடுத்து கிராவ்லியை வெளியேற்றினார். இதன் மூலம் கிராவ்லி மற்றும் டக்கெட் இடையிலான 188 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து அடுத்த ஓவரில் ஆலி போப்பை போல்ட் செய்தார். அது இந்திய அணிக்கு இந்த ஆட்டத்தில் திரும்முனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை அளித்துள்ளது. டக்கெட் 119 ரன்கள் உடன் விளையாடி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT