Last Updated : 23 Jun, 2025 10:11 PM

 

Published : 23 Jun 2025 10:11 PM
Last Updated : 23 Jun 2025 10:11 PM

இங்கிலாந்துக்கு எதிராக இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் வரலாற்று சாதனை!

லீட்ஸ்: இங்கிலாந்து அணி உடனான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார் இந்திய வீரர் ரிஷப் பந்த். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை படைத்துள்ள இரண்டாவது விக்கெட் கீப்பர் ஆகியுள்ளார் பந்த். முன்னதாக, கடந்த 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய ஆன்டி பிளவர், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 142 மற்றும் 199 ரன்களை எடுத்திருந்தார். அவருக்கு பிறகு தற்போது பந்த், 134 மற்றும் 118 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்களை பதிவு செய்துள்ள 7-வது இந்திய வீரர் ஆகியுள்ளார் பந்த். முன்னதாக, விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் (3), ராகுல் திராவிட் (2), விராட் கோலி, ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். இங்கிலாந்து மண்ணில் ஒரே போட்டியில் இரண்டு சதங்களை பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை பந்த் படைத்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 8-வது சதம் ஆகும்.

2-வது இன்னிங்ஸில் ரிஷப் பந்த் ஆட்டம் எப்படி? - லீட்ஸ் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் 471 ரன்களை கிட்டத்தட்ட நெருங்கி வந்தது இங்கிலாந்து. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்தது. அதனால் வெறும் 6 ரன்கள் முன்னிலை உடன் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

92 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. ஆனால், முதல் இன்னிங்ஸில் பந்த் களத்துக்கு வந்த போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. அந்த இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் - ராகுலின் ஓப்பனிங், ஜெய்ஸ்வால் - கில் கூட்டணி என அடித்தளம் அமைத்திருந்தனர். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் இது எதுவும் இல்லை.

இன்று (ஜூன் 23) 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய அணி எதிர்கொண்ட 7-வது பந்தில் விக்கெட்டை இழந்தது. அதனால் ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேர சவால் உட்பட அனைத்தையும் ரிஷப் பந்த் சமாளிக்க வேண்டி இருந்தது. இன்னிங்ஸை நிதானமாக தொடங்கிய பந்த், 83 பந்துகளில் அரை சதம் எட்டினார். ரிஷப் பந்த் விக்கெட்டை வீழ்த்த சுழற்பந்து வீச்சாளர் பஷீரை ஒரு முனையில் தொடர்ந்து பந்து வீச செய்தது இங்கிலாந்து. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் பந்த் விளையாடி இருந்தார். 140 பந்துகளில் 118 ரன்கள் எடுத்த நிலையில் பஷீர் சுழலில் தனது விக்கெட்டை இழந்தார் பந்த். தனது ஆட்டம் மூலம் இந்திய அணிக்கு இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பான பங்களிப்பை பந்த் வழங்கி இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x