Published : 22 Jun 2025 10:55 AM
Last Updated : 22 Jun 2025 10:55 AM
லீட்ஸ்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் உடன் 2-ம் நாள் ஆட்டத்தை முடிவு செய்தது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி லீட்ஸ் நகரில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்கள் இந்த ஆட்டத்தின் முதல் நாளன்று சிறப்பாக பேட் செய்து 85 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்திருந்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் என இருவரும் சதம் விளாசினர். ரிஷப் பந்த, கேப்டன் கில் உடன் சேர்ந்து தரமான கூட்டணி அமைத்தார். அது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 2-ம் நாளின் முதல் ஒரு மணி நேரத்தை சிறப்பாக விளையாடியது. சிக்ஸர் விளாசி தனது ஸ்டைலில் சதம் கண்டார் ரிஷப் பந்த். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 7-வது சதம். அதை கொண்டாடும் வகையில் களத்தில் சம்மர் சால்ட் அடித்து அசத்தினார்.
41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த இந்தியா: கேப்டன் கில் மற்றும் பந்த் இடையிலான 209 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பிரித்தார் இங்கிலாந்தின் ஷோயப் பஷீர். கில் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். 227 பந்துகளில் 147 ரன்கள் எடுத்து கில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 430 ரன்கள் எடுத்திருந்தது.
அதன் பின்னர் வெறும் 41 ரன்கள் மட்டுமே மேற்கொண்டு எடுத்து ஆல் அவுட் ஆனது. கருண் நாயர் (0), ரிஷப் பந்த் (134), ஷர்துல் தாக்குர் (1), பும்ரா (0), ஜடேஜா (11), பிரசித் கிருஷ்ணா (1) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
பென் டக்கெட் + போப் 122 ரன்கள் கூட்டணி: இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரே சறுக்கலாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். அவர் நான்கு ரன்களில் வெளியேறினார். இதன் பின்னர் பென் டக்கெட் மற்றும் ஆலி போப் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டக்கெட் 62 ரன்களில் ஆட்டமிழக்க இந்த கூட்டணி பிரிந்தது.
பும்ரா தாக்கம்: வழக்கம் போலவே தனது பந்து வீச்சு மூலம் அபார செயல்திறனை பும்ரா வெளிப்படுத்தினார். அதன் பலனாக இங்கிலாந்தின் மூன்று விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இழந்துள்ள மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியது பும்ரா மட்டும்தான். மற்ற இந்திய பவுலர்கள் இன்னும் விக்கெட் வீழ்த்தவில்லை.
நழுவிய கேட்ச்: இரண்டாம் நாளில் இங்கிலாந்து பேட் செய்த போது மூன்று கேட்ச் வாய்ப்புகளை இந்திய ஃபீல்டர்கள் நழுவ விட்டனர். அந்த மூன்று வாய்ப்புகளையும் பும்ரா ஏற்படுத்தி கொடுத்தார். டக்கெட்டுக்கு 2 மற்றும் போப்புக்கு ஒன்று என கேட்ச் நழுவ விடப்பட்டது. அதை பிடித்திருந்தால் இங்கிலாந்து பின்னடைவை சந்தித்திருக்கும்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. போப் 100 ரன்கள், புரூக் ரன் ஏதும் எடுக்காமல் உள்ளனர். மூன்றாம் நாளான இன்று இந்திய அணி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைந்து கைப்பற்றுவதில் கவனம் செலுத்தும். தற்போது முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் பின்தங்கியுள்ளது இங்கிலாந்து அணி. போப் சதம் இங்கிலாந்து அணிக்கு இந்த ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT