Published : 20 Jun 2025 09:49 PM
Last Updated : 20 Jun 2025 09:49 PM
ஹெட்டிங்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபார சதம் விளாசினார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதேபோன்று 8 வருடங்களுக்கு பிறகு கருண் நாயரும் அணிக்கு திரும்பினார். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்குரும், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றனர். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ராவுடன் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா களமிறங்கினார்கள்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது. முதல் செஷன் முடியும் தருவாயில் கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை எளிதாக பறிகொடுத்தார். பிரைடன் கார்ஸ் வைடாக வீசிய பந்தை கே.எல்.ராகுல் கவர் டிரைவ் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு முதல் சிலிப் திசையி நின்ற ஜோ ரூட்டிடம் கேட்ச் ஆனது. கே.எல்.ராகுல் 78 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி 24.5 ஓவர்களில் 91 ரன்கள் குவித்தது.
இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேனான தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 4 பந்துகளை சந்தித்த நிலையில், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் கேப்டன் ஷுப்மன் கில், ஜெய்வாலுடன் இணைந்து ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். இந்த ஜோடி வேகப்பந்து வீச்சில் விரைவாக ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 144 பந்துகளில், ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவரது 5-வது சதமாக அமைந்தது. அதன்பின்னர், ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அவர் 159 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தார். ஜெய்ஸ்வாலின் அபார சதம், இந்திய அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்த துணை புரிந்தது.
அதே வேளையில், ஷும்பன் கில் அதிரடி கேமை தொடர்ந்து வருகிறார். அவர் 124 பந்துகளில் 89 ரன்கள் விளாசி களத்தில் உள்ளார். அவருடன் இணைந்துள்ள ரிஷப் பந்த் 36 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இந்திய அணி 66 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT