Published : 19 Jun 2025 02:33 AM
Last Updated : 19 Jun 2025 02:33 AM

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சாய் சுதர்சனை 3-வது இடத்தில் களமிறக்கலாம்: ரவி சாஸ்திரி

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இளம் கேப்டனான ஷுப்மன் கில்லுக்கு இந்தத் தொடர் கடும் சவாலாக இருக்கக்கூடும். இந்நிலையில் இந்த போட்டிக்கான விளையாடும் லெவன் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், தொலைக்காட்சி வர்ணணையாளருமான ரவி சாஸ்திரி ஐசிசி இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கே.எல்.ராகுல் களமிறங்க வேண்டும். ஏனெனில் கே.எல்.ராகுலுக்கு இது மிகப்பெரிய சுற்றுப்பயணம் என்று நான் நினைக்கிறேன். அவர், அதிக அனுபவம் கொண்டவர். கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி சதம் அடித்திருந்தார். அந்த தொடர் அவருக்கு சிறப்பானதாக அமைந்திருந்தது. இதனால் இம்முறையும் அவர், தொடக்க வீரராக களமிறங்குவார் என நம்புகிறேன்.

3-வது இடத்துக்கு இளம் வீரரான சாய் சுதர்சனுடன் செல்வேன். நான் அவரைப் பார்த்த எல்லாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த தொடர் அவர், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள சிறப்பானதாக இருக்கும். 4-வது இடத்தில் கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்குவார். தற்போதைய பார்மை கருத்தில் கொண்டு 5-வது இடத்தில் கருண் நாயர் களமிறங்க வாய்ப்பு உள்ளது. அவர், அணிக்குத் திரும்புவதற்கு கடினமாக உழைத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் கருண் நாயர் எடுத்த ரன்களின் எண்ணிக்கை நம்பமுடியாதது.

ஐபிஎல் தொடரின் போது நான், கருண் நாயரை சந்தித்தேன். அப்போது வாய்ப்புக்காக 'கதவை மட்டும் தட்டாதே, அதை உதைத்துவிட்டு உள்ளே நுழைந்து அந்தப் பக்கத்திற்குச் செல்லுங்கள்' என்று கூறினேர். அவர், அதைச் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கருண் நாயர் உள்ளூர் கிரிக்கெட்டில் எடுத்த ரன்களின் எண்ணிக்கைதான் தேர்வாளர்களை திரும்பி பார்க்க வைத்தது.

6-வது இடத்தில் ரிஷப் பந்த் களமிறங்கலாம். பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா அல்லது அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற வேண்டும். லீட்ஸ் மைதானத்தில் மேகக்கூட்டங்கள் அதிகம் இருந்தால் அர்ஷ்தீப் சிங்கை களமிறக்கலாம். மேலும் ஷர்துல் தாக்குர், நிதிஷ் குமார் ரெட்டி இடையே அணியில் இடம் பெறுவதில் கடினமான போட்டியாக இருக்கும். ஆனால் யார் எவ்வளவு பந்து வீசுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். நித்திஷ் குமார் ரெட்டி 12 முதல் 14 ஓவர்களை வீசுவார், அவரது பேட்டிங் காரணமாக அவருக்கு இடம் கிடைக்கக்கூடும். இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x