Published : 19 Jun 2025 12:55 AM
Last Updated : 19 Jun 2025 12:55 AM
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 484 ரன்கள் குவித்தது.
காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 292 ரன்கள் குவித்தது. நஜ்முல் ஹாசைன் ஷான்டோ 136, முஸ்பிகுர் ரகிம் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடர்ந்து விளையாடியது. ஷான்டோ 279 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 148 ரன்கள் எடுத்த நிலையில் அஷிதா பெர்னாண்டோ பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஷான்டோ, முஸ்பிகுர் ரகிம் ஜோடி 264 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய முஸ்பிகுர் ரகிம் 350 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன 163 ரன்கள் எடுத்த நிலையில் அஷிதா பெர்னாண்டோ பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ் 123 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்த நிலையில் தரிந்து ரத்னாயகே பந்தில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து ஜாகர் அலி 8, நயீம் ஹசன் 6, தைஜூல் இஸ்லாம் 6 ரன்களில் நடையை கட்டினர். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேச அணி 151 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 484 ரன்கள் குவித்தது. ஹசன் மஹ்மூத், நஹித் ரானா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். கைவசம் ஒரு விக்கெட் இருக்க வங்கதேச அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ, மிலன் ரத்னாயகே, தரிந்து ரத்னாயகே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். முன்னதாக மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதனால் 2-வது நாள் ஆட்டத்தில் சுமார் 30 ஓவர்கள் வீச முடியாமல் போனது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT