Published : 18 Jun 2025 06:08 AM
Last Updated : 18 Jun 2025 06:08 AM

ரோஹித், கோலியின் கலவையே ஷுப்மன் கில்: சொல்கிறார் ஜாஸ் பட்லர்

கேப்டன்ஷிப்பில் ரோஹித் சர்மா, விராட் கோலியின் ஆகியோரின் கலவையாக ஷுப்மன் கில் இருப்பதாகவும் எனினும் தனது தனித்துவமான பாணியில் அவர், அணியை வழிநடத்துவார் என இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராடு கலந்து கொண்ட உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜாஸ் பட்லர் பேசியதாவது:

ஷுப்மன் கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இளம் வீரர். அவர் பேசும்போது மிகவும் அமைதியாகவும் அளவோடும் இருப்பார், ஆனால் மைதானத்தில் அவருக்குள் கொஞ்சம் சண்டை இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது; கொஞ்சம் தீவிரத்தன்மை மற்றும் மிகவும் உணர்ச்சிமிக்கவர். அவர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கலவையாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

விரோட் கோலி ஆக்ரோஷ குணமுடையவர், அதை இந்திய அணிக்கும் கடத்தி மாற்றங்களை கொண்டுவந்தார். ஆனால் ரோஹித் சர்மா இதன் மறுபக்கத்தை கொண்டவர். நிதானமாகவும், அமைதியாகவும் செயல்படக்கூடியவர். எனினும் போராடும் குணமும் அவரிடம் இருந்தது. இவர்கள் இருவரிடம் இருந்தும் ஷுப்மன் கில் கற்றுக்கொண்டுள்ளார். எனினும் தனது தனித்துவமான பாணியில் ஷுப்மன் கில், டெஸ்ட் அணியை வழிநடத்துவார்.

அவர் தனது கேப்டன் பதவிக்கும், சொந்த பேட்டிங்கிற்கும் இடையில் சமநிலையைக் கண்டறிய வேண்டும். பேட்டிங் செய்யும்போது ஒரு பேட்ஸ்மேனாகவும், அதன் பின்னர் கேப்டனாக அந்த பதவியில் பணியாற்ற முயற்சிக்க வேண்டும். இரு பணிகளையும் பிரித்து கையாள ஷுப்மன் கில் முயற்சிக்கக்கூடும்.

இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவது மிகவும் கடினமான ஒன்று என நினைக்கிறேன். மிகவும் செல்வாக்கு வாய்ந்த நபர்கள் வரிசையில் பிரதமருக்கு அடுத்து மூன்றாவது அல்லது நான்காவது இடங்களில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனே இருப்பார் என கூறுகிறார்கள்.

இந்தியாவில் உள்ள 150 கோடி மக்களும் கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளனர். அதனால், இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவது ஷுப்மன் கில்லுக்கு பெரிய வேலையாக இருக்கும். விராட் கோலி ராஜா, ஷுப்மன் கில் இளவரசர். பேட்டிங் வரிசையில் 4-வது இடத்தை நிரப்புவதற்கு அடியெடுத்து வைப்பது பெரிய விஷயம். இவ்வாறு ஜாஸ் பட்லர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x