Published : 17 Jun 2025 06:29 AM
Last Updated : 17 Jun 2025 06:29 AM

ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பை தொடர் நாளை (ஜூன் 18) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்குகிறது. ஹாக்கி இந்தியா சார்பில் நடத்தப்படும் இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் 12 அணிகளும், மகளிர் பிரிவில் 8அணிகளும் கலந்து கொள்கின்றன. மொத்தம் 20 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

ஆடவர் பிரிவில் 12 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும்.

அரை இறுதி ஆட்டங்கள் ஜூன் 25-ம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 27-ம் தேதி நடைபெறுகின்றன. தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் 18-ம் தேதி கேரளாவுடன் மோதுகிறது. தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் 22-ம் தேதி ஆந்திராவை சந்திக்கிறது. தமிழக அணியில் ஒலிம்பியன் ஆடம் சின்க்ளேர், இந்திய ஜூனியர் அணிக்காக முன்னாள் வீரர் முத்துசெல்வன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

மகளிர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அணி ‘பி‘ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதேபிரிவில் ஒடிசா, ஹரியாணா, பஞ்சாப் அணிகளும் உள்ளன. லீக் ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். கால் இறுதி ஆட்டங்கள் ஜூன் 24-ம் தேதியும், அரை இறுதி 26-ம் தேதியும், இறுதிப் போட்டி 27-ம் தேதியும் நடைபெறுகிறது.

தமிழக அணி முதல் ஆட்டத்தில் 19-ம் தேதி ஹரியாணாவையும், 2-வது ஆட்டத்தில் 21-ம் தேதி ஒடிசாவையும், 3-வது ஆட்டத்தில் 23-ம் தேதி பஞ்சாபையும் எதிர்கொள்கிறது. இத்தகவலை நேற்று சென்னையில் நடைபெற்ற பத்ரிகையாளர்கள் சந்திப்பின் போது ஹாக்கி இந்தியா பொருளாளரும், தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவருமான சேகர் மனோகரன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஒலிம்பியன் முகமது ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x