Published : 14 Jun 2025 07:49 AM
Last Updated : 14 Jun 2025 07:49 AM

மார்க்ரம் சதம், பவுமா அரை சதம் - வெற்றியை நெருங்கும் தென் ஆப்பிரிக்கா | WTC Final

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா 5, மார்கோ யான்சன் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 57.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டேவிட் பெடிங்ஹாம் 45, கேப்டன் தெம்பா பவுமா 36 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 6, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 40 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. மிட்செல் ஸ்டார்க் 16, நேதன் லயன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது.

நேதன் லயன் 2 ரன்களில் ரபாடா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய ஜோஷ் ஹேசில்வுட்டுடன் இணைந்து மிட்செல் ஸ்டார்க்குடன் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தது. மிட்செல் ஸ்டார்க் 131 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இது அவருக்கு 11-வது அரை சதமாக அமைந்தது.

கடைசி விக்கெட்டுக்கு 135 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை எய்டன் மார்க்ரம் பிரித்தார். ஜோஷ் ஹேசில்வுட் 53 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் எய்டன் மார்க்ரம் வீசிய பந்தை கவர் திசையில் அடித்த போது கேசவ் மகாராஜிடம் கேட்ச் ஆனது. முடிவில் ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மிட்செல் ஸ்டார்க் 136 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 4, லுங்கி நிகிடி 3 விக்கெட்களை வீழ்த்தினர். மார்கோ யான்சன், வியான் முல்டர், எய்டன் மார்க்ரம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதன் பின்னர் 282 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டன் 6 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய வியான் முல்டர், எய்டன் மார்க்ரமுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார்.

வியான் முல்டர் 50 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை கவர் திசையில் நின்ற மார்னஷ் லபுஷேனிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை எளிதாக பறிகொடுத்தார். 2-வது விக்கெட்டுக்கு எய்டன் மார்க்ரம், வியான் முல்டர் ஜோடி 61 ரன்கள் சேர்த்தது.

56 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. எய்டன் மார்க்ரம் 102 ரன்களுடனும், கேப்டன் தெம்பா பவுமா 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவை. 8 விக்கெட்கள் அந்த அணியின் வசம் உள்ளது. மார்க்ரம், பவுமான இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்த்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x