Published : 14 Jun 2025 07:12 AM
Last Updated : 14 Jun 2025 07:12 AM

19 சிக்ஸர்கள் விளாசி ஃபின் ஆலன் சாதனை!

கலிபோர்னியா: அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ், வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சான்பிரான்சிஸ்கோ 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான நியூஸிலாந்தின் ஃபின் ஆலன் 51 பந்துகளில், 19 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் விளாசி மிரட்டினார்.

இந்த ஆட்டத்தில் 19 சிக்ஸர்களை பறக்கவிட்டதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஃபின் ஆலன். இதற்கு முன்னர் ரங்பூர் அணிக்காக விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் 2017-ம் ஆண்டு டாக்கா டைனமைட்ஸ் அணிக்கு எதிராக 18 சிக்ஸர்களையும், எஸ்டோனியாவின் சாஹில் சவுகான் 2024-ம் ஆண்டு சைப்ரஸ் அணிக்கு எதிராக 18 சிக்ஸர்களையும் விளாசியதே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து தற்போது ஃபின் ஆலன் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

முன்னதாக அவர், 34 பந்துகளில் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் எம்எல்சி டி 20 தொடரில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர், நிகழ்த்தினார். இதற்கு முன்னர் நிகோலஸ் பூரன் 2023-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் 40 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். ஒட்டுமொத்தமாக டி 20 அரங்கில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட 2-வது சதமாக இது அமைந்துள்ளது. இந்த வகை சாதனையில் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் புனே அணிக்கு எதிராக 2013-ம் ஆண்டு 30 பந்துகளில் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார்.

270 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வாஷிங்டன் அணி 13.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் பிரான்சிஸ்கோ அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 42, மிட்செல் ஓவன் 39, ஜேக்ட் எட்வர்ட்ஸ் 21 ரன்கள் சேர்த்தனர். பிரான்சிஸ்கோ அணி தரப்பில் ஹாரிஸ் ரவூஃப், ஹசன் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கார்மி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x