Last Updated : 08 Jun, 2025 09:32 PM

 

Published : 08 Jun 2025 09:32 PM
Last Updated : 08 Jun 2025 09:32 PM

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6: கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அசத்தல் வெற்றி 

அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று (ஜூன் 8) அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ், நட்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இதில் முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணியின் அருணா குவாட்ரி (நைஜீரியா), டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஹர்மீத் தேசாயுடன் மோதினார். இதில் உலகத் தரவரிசையில் 18-வது இடம் வகிக்கும் அருணா குவாட்ரி 2-1 (10-11, 11-10, 11-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணியின் அட்ரியானா டயஸ் (புயிர்ட்டோ ரிக்கோ), டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான கிருத்விகா சின்ஹா ராயுடன் மோதினார். இதில் உலகத் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள அட்ரியானா டயஸ் 3-0 (11-1, 11-4, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதனால் இந்த டையில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணி 5-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணியின் அட்ரியானா டயஸ், அங்கூர் பட்டாசார்ஜி ஜோடியானது, டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஜெங் ஜியான் (சிங்கப்பூர்), ஹர்மீத் தேசாய் ஜோடியை எதிர்கொண்டது. இதில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணியின் அட்ரியானா டயஸ், அங்கூர் பட்டாசார்ஜி ஜோடி 2-1 (11-10, 9-11, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் தனது முன்னிலையை 7-2 என அதிகரித்துக் கொண்டது. 4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணியின் அங்கூர் பட்டாசார்ஜி, டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ரோனித் பஞ்சாவுடன் மோதினார். இதில் அங்கூர் பட்டாசார்ஜி 2-1 (10-11, 11-10, 11-1) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான டையை 9-3 என தன்வசப்படுத்தியது கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணி.

கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணியின் செலினா செல்வகுமார், டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஜெங் ஜியானுடன் (சிங்கப்பூர்) பலப்பரீட்சை நடத்தினார். இதில் உலகத் தரவரிசையில் 52-வது இடத்தில் உள்ள ஜெங் ஜியான் 3-0 (11-4, 11-6, 11-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முடிவில் இந்த டையில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணி 9-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6-ல் நாளை (ஜூன் 9) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் – டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x