Published : 04 Jun 2025 07:59 AM
Last Updated : 04 Jun 2025 07:59 AM

ஐபிஎல் சாம்பியன் ஆனது ஆர்சிபி: எப்படி இருந்தது 18 வருட தாகம் தணித்த இறுதிப் போட்டி?

அகம​தா​பாத்: ஐபிஎல் டி 20 தொடரின் 18-வது சீசன் இறு​திப் போட்​டி​யில் நேற்று அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு - பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதின. டாஸ் வென்ற பஞ்​சாப் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இரு அணி​யிலும் எந்​த​வித மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்​லை.

பேட்​டிங்கை தொடங்​கிய பெங்​களூரு அணிக்கு பில் சால்ட் அதிரடி தொடக்​கம் கொடுக்க முயன்​றார். அர்​ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே பில் சால்ட் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரியை விளாசி​னார். இந்த ஓவரில் 13 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. கைல் ஜேமிசன் வீசிய அடுத்த ஓவரின் 2-வது பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய பில் சால்ட், 4-வது பந்தை விளாச முயன்ற போது மிட் ஆன் திசை​யில் நின்ற ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் ஆனது. 9 பந்​துகளை சந்​தித்த பில் சால்ட் 16 ரன்​கள் எடுத்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய மயங்க் அகர்​வால், விராட் கோலி​யுடன் இணைந்து சீராக ரன்​கள் சேர்த்​தார். பவர்​பிளே​வில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 55 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. நிதான​மாக விளை​யாடிய மயங்க் அகர்​வால் 18 பந்​துகளில், 2 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 24 ரன்​கள் எடுத்த நிலை​யில் யுவேந்​திர சாஹல் பந்தை டீப் பேக்​வேர்டு ஸ்கொயர் லெக் திசை​யில் தூக்கி அடித்த போது அர்​ஷ்தீப் சிங்​கிடம் கேட்ச் ஆனது.

இறுதி போட்டியில் வெற்றி பெற்றதும் ஆனந்த
கண்ணீர்விட்ட விராட் கோலி.

இதையடுத்து கேப்​டன் ரஜத் பட்​டி​தார் களமிறங்​கி​னார். யுவேந்​திர சாஹல் வீசிய 9-வது ஓவரில் ரஜத் பட்​டி​தார், லாங் ஆன் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். இந்த ஓவரில் 11 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. 10 ஓவர்​களில் பெங்​களூரு அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 87 ரன்​கள் எடுத்​தது. கைல் ஜேமிசன் வீசிய 11-வது ஓவரின் 3-வது பந்தை மிட் ஆன் திசை​யில் சிக்​ஸருக்கு விளாசிய ரஜத் பட்​டி​தார் 5-வது பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார். அவர், 16 பந்​துகளில், ஒரு பவுண்​டரி, 2 சிக்​ஸர்​களு​டன் 26 ரன்​கள் சேர்த்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய லியாம் லிவிங்​ஸ்​டன் யுவேந்​திர சாஹல் வீசிய 14-வது ஓவரில் லாங் ஆஃப் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். இதே ஓவரில் விராட் கோலி பவுண்​டரி ஒன்றை விரட்​டி​னார். இதனால் இந்த ஓவரில் பெங்​களூரு அணிக்கு 14 ரன்​கள் கிடைத்​தன. நிதான​மாக விளை​யாடி வந்த விராட் கோலி 35 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​கள் எடுத்த நிலை​யில் அஸ்​மதுல்லா ஒமர்​ஸாய் வீசிய பந்​தில் அவரிடமே பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். அப்​போது ஸ்கோர் 14.5 ஓவர்​களில் 131 ஆக இருந்​தது.

டி வில்லியர்ஸுடன் விராட் கோலி.

இதைத் தொடர்ந்து அதிரடி​யாக விளை​யாட முயன்ற லியாம் லிவிங்​ஸ்​டன் 15 பந்​துகளில், 2 சிக்​ஸர்​களு​டன் 25 ரன்​கள் எடுத்த நிலை​யில் கைல் ஜேமிசன் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். ஜிதேஷ் சர்மா 10 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​கள் விளாசிய நிலை​யில் விஜயகு​மார் வைஷாக் வீசிய 18-வது ஓவரில் போல்​டா​னார். ஜிதேஷ் சர்​மா, லிவிங்​ஸ்​டன் ஜோடி 12 பந்​துகளில் 36 ரன்​கள் விளாசி மிரட்​டி​யிருந்​தது. இதில் கைல் ஜேமிசன் வீசிய 17-வது ஓவரில் மட்​டும் 23 ரன்​கள் விளாசப்​பட்​டிருந்​தன.

இதன் பின்​னர் களமிறங்​கிய ரொமாரியோ ஷெப்​பர்​டு, அஸ்​மதுல்லா ஒமர்​ஸாய் வீசிய 19-வது ஓவரின் கடைசி இரு பந்​துகளை பவுண்​டரிக்​கும் சிக்​ஸருக்​கும் விளாசி​னார். மட்​டையை சுழற்ற முயன்ற அவர், 9 பந்​துகளில் 17 ரன்​கள் எடுத்த நிலை​யில் அர்​ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். இதே ஓவரில் கிருணல் பாண்​டியா (4), புவனேஷ்வர் குமார் (1) ஆகியோ​ரும் நடையைக் கட்​டினர். இந்த ஓவரில் அர்​ஷ்தீப் சிங் 5 ரன்​களை மட்​டுமே விட்​டுக் கொடுத்​திருந்​தார். 20 ஓவர்​களில் முடி​வில் பெங்​களூரு அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 190 ரன்​கள் குவித்​தது.

இறுதி போட்டியை உற்சாகமாக கண்டு
களித்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்.

பஞ்​சாப் அணி தரப்​பில் அர்​ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். அஸ்​மதுல்லா ஒமர்​ஸாய், விஜயகு​மார் வைஷாக், யுவேந்​திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 191 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்​சிம்​ரன், பிரியன்ஷ் ஆர்யா ஜோடி நிதான​மான தொடக்​கம் கொடுத்​தது. பிரியன்ஷ் ஆர்யா 19 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​கள் சேர்த்த நிலை​யில் ஜோஷ் ஹேசில்​வுட் வீசிய பந்தை சிக்​ஸருக்கு விளாச முயன்ற போது எல்​லைக்​கோட்​டில் பில் சால்ட்​டின் அபார​மான கேட்ச் காரண​மாக ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து ஜோஷ் இங்​லிஷ் களமிறங்க பவர் பிளே​வில் பஞ்​சாப் அணி 52 ரன்​கள் சேர்த்​தது.

பொறுமை​யாக விளை​யாடி வந்த பிரப்​சிம்​ரன் சிங் 22 பந்​துகளில், 2 சிக்​ஸர்​களு​டன் 26 ரன்​கள் எடுத்த நிலை​யில் கிருணல் பாண்​டியா பந்​தில் பாயின்ட் திசை​யில் நின்ற புவனேஷ்வர் குமாரிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். இதைத் தொடர்ந்து களமிறங்​கிய கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 2 பந்​துகளில் 1 ரன் எடுத்த நிலை​யில் ரொமாரியோ ஷெப்​பர்டு பந்தை கட் ஷாட் விளை​யாட முயன்​றார். ஆனால் பந்து மட்டை விளிம்​பில் பட்டு விக்​கெட் கீப்​பர் ஜிதேஷ் சர்​மா​விடம் கேட்ச் ஆனது.

வெற்றி உற்சாகத்தில் விராட் கோலி.

இதையடுத்து நேஹல் வதேரா களமிறங்​கி​னார். 10 ஓவர்​களில் பஞ்​சாப் அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 81 ரன்​கள் எடுத்​தது. கிருணல் பாண்​டியா வீசிய அடுத்த ஓவரில் ஜோஷ் இங்​லிஷ் டீப் மிட்விக்​கெட் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். தொடர்ந்து ரொமாரியோ ஷெப்​பர்டு வீசிய 12-வது ஓவரிலும் லெக் திசை​யில் சிக்​ஸர் ஒன்றை பறக்​க​விட்​டார் ஜோஷ் இங்​லிஷ். அதிரடி​யாக விளை​யாடிய ஜோஷ் இங்​லிஷ், கிருணல் பாண்​டியா வீசிய 13-வது ஓவரின் முதல் பந்தை லாங் ஆன் திசை​யில் சிக்​ஸரை நோக்கி விளாசிய போது எல்​லைக் கோட்​டுக்கு மிக அருகே லியாம் லிவிஸ்​டனிடம் கேட்ச் ஆனது.

23 பந்​துகளை எதிர்​கொண்ட ஜோஷ் இங்​லிஷ் 4 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 39 ரன்​கள் சேர்த்​தார். அப்​போது பஞ்​சாப் அணி 98 ரன்​கள் எடுத்​திருந்​தது. இதன் பின்​னர் சஷாங் சிங், நேஹல் வதே​ரா​வுடன் இணைந்​தார். ரொமாரியோ ஷெப்​பர்டு வீசிய 15-வது ஓவரில் சஷாங் சிங் பவுண்​டரி​யும், நேஹல் வதேரா சிக்​ஸரும் விளாசினர். கடைசி 5 ஓவரில் பஞ்​சாப் அணி​யின் வெற்​றிக்கு 72 ரன்​கள் தேவை​யாக இருந்​தன.

ஜோஷ் ஹேசில்​வுட் வீசிய 16-வது ஓவரில் சஷாங் சிங் 2 சிக்​ஸர்​கள் விளாச இந்த ஓவரில் 16 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. மறு​புறம் ரன்​கள் சேர்க்க தடு​மாறிய நேஹல் வதேரா 18 பந்​துகளில், ஒரு சிக்​ஸருடன் 15 ரன்​கள் எடுத்த நிலை​யில் புவனேஷ்வர் குமார் வீசிய 16-வது ஓவரின் 2-வது பந்தை டீப் கவர் திசை​யில் அடித்த போது கிருணல் பாண்​டி​யா​விடம் கேட்ச் ஆனது. இதன் பின்​னர் களமிறங்​கிய மார்​கஸ் ஸ்டாய்​னிஸ் சந்​தித்த முதல் பந்தை சிக்​ஸருக்கு பறக்​க​விட்ட நிலை​யில் அடுத்த பந்தை ஷார்ட்​தேர்டு திசை​யில் யாஷ் தயாளிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

பெங்களூரு அணியின் வெற்றியை கொண்டாடிய விராட் கோலியின்
மனைவி அனுஷ்கா சர்மா.

இந்த இரு விக்​கெட்​களும் பெரிய திருப்​பு​முனையை ஏற்​படுத்​தின. கடைசி 3 ஓவர்​களில் பஞ்​சாப் அணி​யின் வெற்​றிக்கு 47 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. யாஷ் தயாள் வீசிய 18-வது ஓவரின் 2-வது பந்​தில் அஸ்​மதுல்லா ஒமர்​ஸாய் (1) ஆட்​ட​மிழக்க ஆட்​டத்​தில் பரபரப்பு அதி​க​மானது. இந்த ஓவரில் யாஷ் தயாள் 6 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​தார். இதனால் பஞ்​சாப் அணிக்கு அழுத்​தம் அதி​கரித்​தது. கடைசி 2 ஓவர்​களில் பஞ்​சாப் அணி​யின் வெற்​றிக்கு 41 ரன்​கள் தேவை​யாக இருந்​தன.

புவனேஷ்வர் குமார் வீசிய 19-வது ஓவரில் சஷாங்க் சிங் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி விளாச 13 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. ஜோஷ் ஹேசில்​வுட் வீசிய கடைசி ஓவரில் பஞ்​சாப் அணி​யின் வெற்​றிக்கு 29 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. இதில் முதல் இரு பந்​துகளை​யும் சஷாங் சிங் வீணடித்​தார். இதனால் 4 பந்​துகளில் 29 ரன்​கள் தேவை என்ற நிலை உரு​வாக பெங்​களூரு அணி​யின் வெற்றி உறுதியானது. கடைசி 4 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரியை சஷாங் சிங் விளாசி​னார். எனினும் அது வெற்​றிக்கு போது​மான​தாக அமையவில்​லை.

முடி​வில் பஞ்​சாப் அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 184 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. சஷாங் சிங் 30 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். பெங்​களூரு அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், கிருணல் பாண்​டியா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். யாஷ் தயாள், ஹேசில்​வுட், ரொமாரியோ ஷெப்​பர்டு ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ராயல் சாலஞ்​சர்​ஸ் பெங்​களூரு அணி ஐபிஎல் வரலாற்​றில் முதன்​முறை​யாக கோப்​பையை வென்​றது. இதன் மூலம் அந்த அணி​யின் 18 வருட காத்​திருப்​பு முடிவுக்​கு வந்​துள்​ளது. பெங்​களூரு அணிக்​காக 18 வருடங்​களாக விளை​யாடி வரும்​ வி​ராட்​ கோலி முதன்​முறை​யாக ஐபிஎல்​ ​சாம்​பியன்​ பட்​டத்​தை ருசித்​துள்​ளார்​.

கிருணல் பாண்டியா அசத்தல்: கிருணல் பாண்டியா 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். நடு ஓவர்களில் அவர், பஞ்சாப் அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார்.

ஆயுதப்படைக்கு மரியாதை: ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூரின் போது சிறப்பாக செயல்பட்ட ஆயுதப் படைகளை கவுரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் இந்த கருத்தை மையமாக வைத்து நடன நிகழ்ச்சியும் இடம் பெற்றது.

  • ரன்வேட்டை டாப் 10 @ ஐபிஎல் 2025:
  • சாய் சுதர்சன் - 759
  • சூர்யகுமார் யாதவ் - 717
  • விராட் கோலி - 657
  • ஷுப்மன் கில் - 650
  • மிட்செல் மார்ஷ் - 627
  • ஸ்ரேயஸ் ஐயர் - 604
  • ஜெய்ஸ்வால் - 559
  • பிரப் சிம்ரன் சிங் - 549
  • கே.எல்.ராகுல் - 539
  • ஜாஸ் பட்லர் - 538

  • விக்கெட் வேட்டை டாப் 10 @ ஐபிஎல் 2025
  • பிரசித் கிருஷ்ணா - 25
  • நூர் அகமது - 24
  • ஜோஷ் ஹேசில்வுட் - 22
  • டிரெண்ட் போல்ட் - 22
  • அர்ஷ்தீப் சிங் - 21
  • சாய் கிஷோர் - 19
  • ஜஸ்பிரீத் பும்ரா - 18
  • வருண் சக்ரவர்த்தி - 17
  • வைபவ் அரோரா - 17
  • பாட் கம்மின்ஸ் - 17

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x