Published : 04 Jun 2025 01:05 AM
Last Updated : 04 Jun 2025 01:05 AM
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்களில் ஆர்சிபி வாகை சூடியது.
இந்தச் சூழலில் நடப்பு சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விருது கொடுத்து அங்கீகரித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மற்றும் சிறந்த கள செயல்பாடு என பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் அடங்கும்.
வளர்ந்து வரும் வீரர்: நடப்பு சீசனில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை 23 வயதான சாய் சுதர்ஷன் வென்றார்.
சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி இந்த சீசனில் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதை வென்றார். 7 இன்னிங்ஸ்களில் 252 ரன்களை அவர் எடுத்தார். 18 ஃபோர்கள் மற்றும் 24 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 206.66.
ஆரஞ்சு கேப்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நடப்பு சீசனில் 15 இன்னிங்ஸ் ஆடி, 759 ரன்களை எடுத்தார் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன். அவரது ஸ்ட்ரைக் ரேட் 156. மொத்தம் 88 ஃபோர்கள், 21 சிக்ஸர்களை அவர் விளாசினார். இதன் மூலம் இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்து பேட்ஸ்மேனுக்கான ஆரஞ்சு கேப் விருதை வென்றார்.
பர்ப்பிள் கேப்: அதே குஜராத் அணிக்காக விளையாடிய பிரசித் கிருஷ்ணா, 15 போட்டிகளில் 59 ஓவர்கள் வீசி 25 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன் மூலம் பர்ப்பிள் கேப் விருதை அவர் வென்றுள்ளார்.
ஃபேர்பிளே விருது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் இந்த விருதை வென்றுள்ளது. இந்த விருதுகளுடன் பரிசுத் தொகையும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT