Published : 03 Jun 2025 08:07 PM
Last Updated : 03 Jun 2025 08:07 PM
அகமதாபாத்: முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகன் நான் என பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். அதோடு நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி பட்டம் வெல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியை நேரில் காண அவர் அகமதாபாத் வந்துள்ளார். மைதானத்தில் இருந்தபடி ஆர்சிபி அணிக்கு அவர் உற்சாகம் கொடுப்பார்.
“லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை இடம்பெற செய்ததில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) முக்கிய பங்கு உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டை மாற்றம் காண செய்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் இதில் விளையாட வேண்டும் என விரும்புகின்றனர். மகளிரையும் இதில் ஈடுபட செய்யும் வகையில் மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. அது வரவேற்கத்தக்கது.
நான் விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகர். அவர் ஒரு ஜாம்பவான். நான் பிரிட்டன் பிரதமராக இருந்த போது கோலியின் ஆட்டோகிராஃப் உடன் கூடிய பேட் ஒன்றை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தீபாவளி பரிசாக அளித்தார்.
நான் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் பிரதமர் மோடி உடன் கிரிக்கெட் குறித்து பேசியது உண்டு. இங்கிலாந்துக்கு இந்தியா கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அது சிறப்பான தொடராக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
நான் பெங்களூருவை சேர்ந்த குடும்பத்தில் இருந்து பெண் எடுத்துள்ளேன். அதனால் பெங்களூரு அணிக்கு தான் எனது ஆதரவு. திருமணமான போது ஆர்சிபி அணியின் ஜெர்ஸியை பரிசாக எனது மனைவியின் குடும்பத்தார் வழங்கினர்” என ரிஷி சுனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT