Published : 02 Jun 2025 08:02 PM
Last Updated : 02 Jun 2025 08:02 PM
புதுடெல்லி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதேபோல தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹென்ரிச் கிளாசனும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒரே நாளில் இரண்டு அதிரடி ஆட்டக்காரர்கள் ஓய்வை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேக்ஸ்வெல்: கிரிக்கெட் உலகில் ‘பிக்-ஷோ’ என செல்லமாக அழைக்கப்படுபவர் மேக்ஸ்வெல். கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 149 போட்டிகளில் 3,990 ரன்களை அவர் எடுத்துள்ளார். சராசரி 33.81, ஸ்ட்ரைக் ரேட் 126.70. ஆஃப் ஸ்பின்னரான அவர் 77 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 91 கேட்ச்களை பிடித்துள்ளார்.
2015 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணியில் முக்கிய அங்கம் வகித்த வீரர். இதில் கடந்த 2023-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 201 ரன்களை விளாசினார். அந்த ஆட்டத்தில் ஆஸி. அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து பின்னடைவில் இருந்த நிலையில் மேக்ஸ்வெல் ஆடிய இன்னிங்ஸ் அது. அதை கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத இன்னிங்ஸ்களில் ஒன்று என்றும் சொல்லலாம். தசைப்பிடிப்பு உடன் போராடி அந்த ஆட்டத்தை ஆஸி.க்கு அவர் வென்று கொடுத்தார்.
“தேர்வுக்குழுவின் தலைவர் ஜார்ஜ் பெய்லி உடன் நான் பேசினேன். அப்போது 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை குறித்து நாங்கள் பேசினோம். ‘என்னால் அது முடியாது என நினைக்கிறேன். அதனால் எனது இடத்தில் மாற்று வீரரை முயற்சிக்க திட்டமிடலாம். மேலும், அதன் மூலம் அந்த இடத்தை அவர்களுடையதாக மாற்றாலம்’ என அவரிடம் சொன்னேன். நிச்சயம் அந்த இடத்துக்கு சிறந்த வீரர்கள் பலர் ஆப்ஷன்களாக இருப்பார்கள். இன்னும் இரண்டு தொடர்கள் என சொல்லி, சுயநலத்தோடு விளையாட நான் விரும்பவில்லை” என மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
கிளாசன்: “இது எனக்கு சோகமான நாள். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனக்கும், எனது குடும்பத்தின் எதிர்காலத்துக்கும் எது சரி என்பது குறித்து தீர்மானிக்க எனக்கு நேரம் தேவைப்பட்டது. குடும்பத்துடன் நேரம் செலவிடவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என கிளாசன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காக 60 ஒருநாள், 58 டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT