Published : 01 Jun 2025 10:14 PM
Last Updated : 01 Jun 2025 10:14 PM

அகில இந்திய ஹாக்கி போட்டி: புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி சாம்பியன்

கோவில்பட்டியில் நடந்த அகில இந்திய ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணிக்கு லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்த அகில இந்திய ஹாக்கி போட்டியில் புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்று சாம்பியன் ஷிப்பை தட்டிச்சென்றது.

கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை, கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடந்த 3, 4-வது இடங்களுக்கான போட்டியில் புதுடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதின. இதில், 4 - 2 என்ற கோல் கணக்கில் புதுடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு நடந்த இறுதி போட்டியில் புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், புவனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதின. போட்டியை கே.ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் முன்னாள் இந்திய ஹாக்கி வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான எம்.முகமது ரியாஸ் தொடங்கி வைத்தார்.

இதில், 3 - 2 என்ற கோல் கணக்கில் புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி சாம்பியன் ஷிப் பெற்றது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. சாம்பியன் பெற்ற புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணிக்கு ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த புவனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணிக்கு ரூ.1 லட்சம், 3-வது இடம் பிடித்த புதுடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் லட்சும் அம்மாள் நினைவு கோப்பை வழங்கப்பட்டது. 4-வது இடம் பெற்ற செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணிக்கு நினைவு கோப்பை வழங்கப்பட்டது. மேலும், நடுவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கோல்கீப்பர், சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர், சிறந்த நடுகள ஆட்டக்காரர், சிறந்த முன்வரிசை வீரர், சிறந்த வளர்ந்து வரும் வீரர் மற்றும் போட்டியின் சிறந்த வீரர் ஆகிய தனி நபர் விருதுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x