Last Updated : 01 Jun, 2025 04:51 PM

 

Published : 01 Jun 2025 04:51 PM
Last Updated : 01 Jun 2025 04:51 PM

‘ஈ சாலா கப் நம்தே’ - ஆர்சிபி பட்டம் வெல்லும் என டிவில்லியர்ஸ், வார்னர் நம்பிக்கை!

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

2008 முதல் நடப்பு ஐபிஎல் சீசன் வரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளில் ஒன்றாக உள்ளது ஆர்சிபி. இருப்பினும் அந்த அணியின் பலமே மாறாத நேசம் கொண்ட அதன் ரசிகர்கள் தான். இந்த முறை தங்கள் அணி பட்டம் வெல்லும் என ஒவ்வொரு சீசனிலும் கோடான கோடி ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பார்ப்பது உண்டு.

நடப்பு சீசனில் அது கிட்டத்தட்ட கைகூடி வந்துள்ளது. ஆர்சிபி இன்னும் ஒரே ஒரு வெற்றியை பெற்றால் பட்டம் வெல்லும் நெடுநாள் கனவு மெய்ப்படும் நாளாக ஜூன் 3-ம் தேதி அமையும். அது நடந்தால் இரவு நேர வானம் செக்கச்சிவந்த வானமாக அதிர்வேட்டுகளை போட்டு ஆர்சிபி வண்ண மயமாக்குவார்கள். “என் உடலில் உள்ள ரெட் பிளட் செல்ஸ் எல்லாம் ‘ஆர்சிபி… ஆர்சிபி’” என முழக்கமிடுவதாக தீவிர ஆர்சிபி ஆதரவாளர் ஒருவர் சொல்லியுள்ளார்.

நிச்சயம் தங்கள் அணியின் ஆதரவாளர்கள், ரசிகர்களின் நம்பிக்கையை அந்த அணி வீரர்கள் வீண் போக செய்ய மாட்டார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி அணி நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. 2009, 2011 மற்றும் 2016 என இதற்கு முன்னர் மூன்று ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி விளையாடி உள்ளது. இதில் கடந்த 2016 சீசனில் கோப்பை வெல்லும் வாய்ப்பை வெறும் 9 ரன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வசம் தவறவிட்டது ஆர்சிபி. அந்த ஆட்டத்தை வென்ற மற்றும் இழந்த அணியில் இடம்பிடித்த டேவிட் வார்னர் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் இந்த முறை ஆர்சிபி கோப்பை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

“நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மகிழ்ச்சி தருகிறது. இந்த ஆட்டத்தை மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துள்ளேன். இந்த ஆண்டு ஆர்சிபி அணியின் ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன்” என டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

‘இந்த முறை ஐபிஎல் சாம்பியன் யார்?’ என எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ‘ஆர்சிபி என நான் நினைக்கிறேன். ஹேசில்வுட் மேன் ஆப் தி மேட்ச் விருதை வெல்வார்’ என டேவிட் வார்னர் ரிப்ளை கொடுத்துள்ளார்.

இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிபையர் - 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் ஆர்சிபி உடன் பலப்பரீட்சை மேற்கொள்ளும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x