Published : 01 Jun 2025 04:42 PM
Last Updated : 01 Jun 2025 04:42 PM
மும்பை: புரோ கபடி லீக் சீசன் 12 வீரர்களுக்கான ஏலம் மும்பையில் (மே 31) நேற்று தொடங்கியது. ஏலத்தின் முதல் நாள், இந்த விளையாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத நாளாகப் பதியப்பட்டது. ஏலத்தின் தொடக்க நாளிலேயே 10 வீரர்கள் ரூ.1 கோடியை கடந்த விலையில் வாங்கப்பட்டனர், இது கடந்த சீசனின் ஐந்து கோடீஸ்வரர்களைவிட இரட்டிப்பு எண்ணிக்கையாகும்.
இரு முறை சாம்பியனாகவும், சீசன் 11-ன் அதிக மதிப்புடடைய வீரராகவும் திகழ்ந்த முகதுரேசா ஷாட்லூயி ரூ.2.23 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன் மூலம், தொடர்ந்து மூன்று சீசன்களிலும் ரூ.2 கோடிக்கு மேலான விலைக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
சீசன் 11-ல் சிறந்த ரைடராக திகழ்ந்த தேவாங்க் தலால், பெங்கால் வாரியர்ஸ் அணியால் ரூ.2.205 கோடிக்கு வாங்கப்பட்டு, புரோ கபடி லீக் வரலாற்றில் ஐந்தாவது உயர்ந்த விலைக்கு ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த ஏலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஃஎப்பிஎம் விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், ஏலத்தில் தங்கள் முன்னாள் வீரரை மீண்டும் பெற, அந்த வீரருக்கான இறுதி ஏலத்தை அணிகள் ஒப்புக்கொண்டு வாங்கலாம். தபாங் டெல்லி இந்த விதியை பயன்படுத்தி அஷு மாலிக்-ஐ ரூ.1.90 கோடிக்கு மீண்டும் வாங்கியது. அதேபோல் பாட்னா பைரேட்ஸ், அங்கித் ஜாக்லன்-ஐ ரூ.1.573 கோடிக்கு ஃஎப்பிஎம் மூலம் பெற்றது. இதனுடன் பிரிவு ஏ, பி என இரண்டிலும் 5 வீரர்கள் தலா ரூ.1 கோடிக்கு மேல் விலைக்கு வாங்கப்பட்டனர்.
மற்ற முக்கிய வீரர்கள்: அர்ஜுன் தேஷ்வால் (தமிழ் தலைவாஸ்) - ரூ.1.40 கோடி, யோகேஷ் தஹியா (பெங்களூரு புல்ஸ்) - ரூ.1.25 கோடி, நவீன் குமார் (ஹரியானா ஸ்டீலர்ஸ்) - ரூ.1.20 கோடி, குமன் சிங் (UP யோத்தாஸ்) - ரூ.1.73 கோடி, சச்சின் தன்வார் (புனேரி பல்டன்) - ரூ.1.58 கோடி, நிதின் குமார் (ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்) - ரூ.1.2 கோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT