Published : 30 May 2025 06:56 PM
Last Updated : 30 May 2025 06:56 PM

மே.இ.தீவுகளை கதறவிட்ட இங்கிலாந்து - 238 ரன்களில் பெரிய வெற்றி!

பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி மிகப் பெரிய ஒருநாள் வெற்றியைப் பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷேய் ஹோப் தன் அனுபவமின்மையைக் காட்டும் விதமாக டாசில் வென்று அதிரடி இங்கிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தது, அதுவும் மட்டைப் பிட்சில் இந்த முடிவு எடுத்து வாழ்நாள் தவற்றைச் செய்து விட்டார். இதனையடுத்து இங்கிலாந்து 400 ரன்களைக் குவித்தது, மீண்டும் இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் 26 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அசிங்கமாகத் தோற்றது.

ஹாரி புரூக் ஃபுல் டைம் லிமிடெட் ஓவர் கேப்டனாக முதல் போட்டியிலேயே மிகப் பெரிய வெற்றியைச் சாதித்து விட்டார். வெஸ்ட் இண்டீஸ் சொத்தையாக ஆடினாலும் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் திறந்துள்ளது என்றே கூற வேண்டும்.

இங்கிலாந்தின் 21 வயது புதுமுகம், பார்படாஸில் பிறந்து இங்கிலாந்து வந்துள்ள ஜேக்கப் பெத்தெல் ஐபிஎல் ஆர்சிபி அணிக்கு ஆடி இங்கிலாந்துக்கு வந்து அதிரடி காட்டினார். 8 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் விளாசி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். பென் டக்கெட், ஜோ ரூட், கேப்டன் புரூக் அரைசதங்கள் விளாசினர்.

இதோடு கேப்டன் புரூக் நேற்று 30 யார்டு வட்டத்திற்குள் நின்று கொண்டே 5 கேட்ச்களை எடுத்ததும் ஒரு சாதனைதான். ஜாண்ட்டி ரோட்ஸுக்குப் பிறகு இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ளார் புரூக். இதில் தற்செயல் அதிசயம் என்னவெனில் ஜாண்ட்டி ரோட்ஸும் மே.இ.தீவுகளுக்கு எதிராகத்தான் இந்தச் சாதனையை 1993ம் ஆண்டு நிகழ்த்தினார்.

ஏற்கெனவே 2023 உலகக் கோப்பை தொடரில் தகுதி பெறவில்லை. 2027 உலகக் கோப்பைத் தகுதியும் நிச்சயமில்லை என்னும் மே.இ.தீவுகள் அணியை மறு கட்டுமானம் செய்கிறது என்று தெரிகிறது. மே.இ.தீவுகளின் பந்து வீச்சு நாலாப்பக்கமும் சிதறடிக்கப்பட்டது. மேத்யூ ஃபோர்ட் 8 ஓவர்களில் 88 ரன்கள் வாரி வழங்கினார். ஜெய்ரன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் 8 ஓவர்களில் 84 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

அல்ஜாரி ஜோசப் கொஞ்சம் பரவாயில்லை ரகம், 10 ஓவர் 69 ரன் 2 விக்கெட். ராஸ்டன் சேஸ் ஆஃப் ஸ்பின் மரியாதையாக எதிர்கொள்ளப்பட அவர் 6 ஓவர்களில் 41. ரன்களை மட்டுமே கொடுத்தார். ஆனால் மே.இ.தீவுகளின் சிறந்த பந்து வீச்சு, சிக்கன வீச்சு என்றால் குடகேஷ் மோட்டிதான் 7 ஓவர்களில் 39 ரன்களையே அவர் விட்டுக் கொடுத்தார். அவருக்கு 10 ஓவர்கள் கொடுக்காதது ஷேய் ஹோப்பின் தவறு.

சேசிங்கில் வெஸ்ட் இண்டீஸின் சோகம் இன்னும் பட்டவர்த்தனமானது. 12 ஓவர்களில் மே.இ.தீவுகளின் 6 வீரர்கள் பெவிலியன் திரும்பினர். மஹ்மூத் அருமையான ஸ்விங் பவுலிங்கில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கில் சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை.

ஜெய்டன் சீல்ஸ் 14 பந்துகளில் 29 ரன்களை கடைசியில் விளாசினார். ஆனால், வெஸ்ட் இண்டீஸின் ஒரே ஆறுதல், இங்கிலாந்தின் ஒரே கவலை... ஒன் டே ஸ்பெஷலிஸ்ட் ஆதில் ரஷீத் 5 ஓவர்களில் 50 ரன்களை கொடுத்ததுதான். ஆட்ட நாயகன் ஜேக்கப் பெத்தெல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x