Published : 28 May 2025 06:47 AM
Last Updated : 28 May 2025 06:47 AM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் 11-ம் நிலை வீரரான டேனியல் மேத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 3-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனும், 5 முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 2-வது இடமும் பிடித்த 11-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள கிரேட் பிரிட்டனின் கேமரூன் நோரியுடன் மோதினார்.
இதில் கேமரூன் நோரி 7-5, 6-3, 4-6, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் டேனியல் மேத்வதேவை தோற்கடித்தார். முன்னாள் முதல் நிலை வீரரான டேனியல் மேத்வதேவ், பிரெஞ்சு ஓபனில் முதல் சுற்றுடன் வெளியேறுவது இது 6-வது முறையாகும்.
3-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் லீனர் டியனையும், 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் அலெக்ஸ் டி மினார் 6-3, 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் செர்பியாவின் லாஸ்லோ டிஜெரேவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஒலிவியா காடெக்கியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 6-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவையும், பெலாரஸின் விக்டோரியா அசரன்கா 6-0, 6-0 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் யானியா விக்மேயரையும், அமெரிக்காவின் சோபியா கெனின் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் வர்வரா கிராச்சேவாவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT