Published : 23 May 2025 07:49 AM
Last Updated : 23 May 2025 07:49 AM

‘கடைசி 2 ஓவர்களால் எல்லாம் போச்சு’ - டெல்லி கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் வருத்தம்

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 73 ரன்களும், நமன் திர் 8 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களும் விளாசினர். ரியான் ரிக்கெல்டன் 25, வில் ஜேக்ஸ் 21, திலக் வர்மா 27 ரன்கள் சேர்த்தனர்.

ஒரு கட்டத்தில் மும்பை அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் முகேஷ் குமார் வீசிய 19-வது ஓவரில் 27 ரன்களையும், துஷ்மந்தா சமீரா வீசிய கடைசி ஓவரில் 21 ரன்களையும் வேட்டையாடியது சூர்யகுமார் யாதவ், நமன்திர் ஜோடி. இதன் காரணமாகவே மும்பை அணியால் வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 39 ரன்கள் எடுத்தார்.

181 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. கே.எல்.ராகுல் 11, பொறுப்பு கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 6, அபிஷேக் போரெல் 6, விப்ராஜ் நிகாம் 20, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2, அஷுதோஷ் சர்மா 18 ரன்களில் நடையை கட்டினர். மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

மும்பை அணிக்கு இது 8-வது வெற்றியாக அமைந்தது. 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளையில் டெல்லி அணி 6-வது தோல்வியை சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. அந்த அணி 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் டெல்லி அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் கூறும்போது,“ பீல்ங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாக உணர்ந்தோம். களத்தில் வீரர்கள் போராட்ட குணத்தை வெளிப்படுத்தினர். பந்து வீச்சாளர்கள் சரியான திசையில் பந்துகளை வீசினர். இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு எளிதான மைதானம் அல்ல.

கடைசி இரண்டு ஓவர்களில்தான் நாங்கள் ஆட்டத்தை அதை நழுவ விட்டுவிட்டோம். கிரிக்கெட்டில் உத்வேகம் என்பது முக்கியமான விஷயம். கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை அணி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு கிட்டத்தட்ட 50 ரன்கள் விளாசியது. இது நாங்கள் 18 ஓவர்கள் வரை செய்த சிறப்பான வேலையைச் சிதைத்தது. இங்குதான் நாங்கள் உத்வேகத்தை இழந்தோம்.

பேட்டிங்கை பொறுத்தவரை இதுபோன்ற ஆடுகளங்களில் சிறப்பான தொடக்கம் அமைய வேண்டும். ஆனால் அதை நாங்கள் பெறவில்லை. கடந்த 6 முதல் 7 ஆட்டங்களாகவே நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தளர்வாக இருந்தோம். ஐபிஎல் தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்க வேண்டுமென்றால் இதுபோன்று இருக்கக்கூடாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x